பாட்னா :பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே தனியார் ஹோட்டல் இயங்கி வந்தது. இந்நிலையில், இன்று (ஏப்.25) காலை 11 மணி அளவில் ஹோட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. ஹோட்டல் முழுவதும் தீ பரவிய நிலையில், விடுதியில் தங்கி இருந்த வாடிக்கையாளர்கள் வெளியேற முடியாமல் தவித்து உள்ளனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பீகார் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஹோட்டலில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீ விபத்தில் ஹோட்டலில் தங்கி இருந்த 3 பெண்கள் உள்பட 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இரண்டு பேர் தீவிர தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் 20 பேர் லேசான தீக்காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.