மும்பை:இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் நேற்று( அக்.9) காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துமd பொருட்டு, மகாராஷ்டிரா மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னவீஸ், அஜித் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ரத்தன் டாடா மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முதல்வர் ஷிண்டே இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். அதில் டாடாவின் வாழ்நாள் சாதனைகளை பட்டியலிட்டு அவர் பேசினார். அதைதொடர்ந்து ரத்தன் டாடாவின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற திட்டத்துக்கு ஒப்புதல் என்ற மற்றொரு தீர்மானமும் மகாராஷ்டிரா மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க:மறைந்தது இந்தியத் தொழில்துறையின் முகம்..தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்!
இன்றைய அமைச்சரவைக் கூட்டம் குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தொழில்முனைவு ஓர் சிறந்த வழியாகும். புதிய தொழில்களை உருவாக்குவதன் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். ஆனால் அதற்கு உண்மையான தேசபக்தியும் சமூகத்தின் மீது அக்கறையும் தேவை. ரத்தன் டாடா இந்த உயர்ந்த குணங்களைக் கொண்டவராக திகழ்ந்தார்.
தொழில் துறையில் மட்டுமின்றி, சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் இவரது பங்களிப்பு அசாத்தியமானது. அவர் மகாராஷ்டிராவின் மகன் மற்றும் இந்தியாவின் பெருமை. ரத்தன் டாடா உயர் நெறிமுறைகளைப் பின்பற்றி, சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்தினார். அவரது மறைவால், நாட்டின் முக்கிய தூண் இடிந்து விழுந்துள்ளது" என்று இரங்கல் தீர்மானத்தில் முதல்வர் ஷிண்டே குறிப்பிட்டார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.