இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கின்னஸ் சாதனை முயற்சியாக மரம் நடும் நிகழ்ச்சி அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டது. ஜூலை 13ஆம் தேதி காலை 7.03 மணிக்கு மரம் நடுதல் பணி தொடங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 24 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், 24 லட்சத்தை தாண்டி அதிகரிக்கக்கூடும் என கின்னஸ் சாதனை புத்தகத்தின் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் 24 மணி நேரத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமாக மரம் நட்டு இந்தூர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
அதேநேரம் அசாம் மாநிலத்தின் முந்தைய சாதனையையும் இந்தூர் முறியடித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அசாம் மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 9 லட்சத்து 26 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. அந்த சாதனையை முதல் மாலை 5 மணி அளவில் முறியடிக்கப்பட்டதாக கின்னஸ் சாதனை புத்தக குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததற்கான சான்றிதழை மத்திய பிரதேச முதலமைச்சர் மேகன் யாதவிடன் புத்தக குழுவினர் வழங்கினர். மாநில அரசிடம் தற்காலிக கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்றதும் அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்படும் என கின்னஸ் புத்தக குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இறுதியில் லண்டனில் இருந்து கொண்டு வரப்படும் அதிகாரப்பூர்வ கின்னஸ் சான்றிதழ் மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும். மேலும் அதிகாரப்பூர்வ கின்னஸ் சாதனை சான்றிதழில் எத்தனை லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் பொறிக்கப்பட உள்ளது. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இந்தூர் நகரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்தூர் நகரம் பிரதமர் தலைமையில் ஒரு நாளில் 12 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளது. நரேந்திர மோடியின் Ek Ped Maa Ke Naam பிரச்சாரத்தின் கீழ் வரும் ஆண்டுகளில் லட்சக்கணக்கானோர் இதை பின்பற்றும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கேரளாவில் அரசு மருத்துவமனை லிப்டில் 2 நாட்கள் சிக்கிய முதியவர்! என்ன நடந்தது? - Man Stuck lift two days in kerala