டெல்லி:நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மற்றபடி 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மக்களவை தேர்தலில் 64 கோடியே 20 லட்சம் பேர் வாக்களித்ததாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஏறத்தாழ 540 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள நிலையில், இதில் பாஜக மட்டும் தனியாக 441 தொகுதிகளில் களம் காணுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகள் 99 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சிகள் சில மாநிலங்களில் கூட்டணியிலும், சில மாநிலங்களில் எதிரெதிர் அணியிலும் களம் காண்கின்றன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் எனக் கூறப்பட்டது. அதேநேரம் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கு 200க்கும் மேற்பட்ட தொகுதிகள் கிடைக்கலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.