ஐதராபாத்:18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூன்.4) நிறைவு பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம் அக்கட்சி 240 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மைக்கு தேவையான 32 தொகுதிகளை கோட்டை விட்டது.
அதேநேரம், 2019 மக்களவை தேர்தலை காட்டிலும் 2024 மக்களவை தேர்தலில் இரண்டு மடங்கு கூடுதலாக காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை 543 மக்களவை தொகுதியில் 78 இஸ்லாமிய வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அதில் 24 பேர் வெற்றி பெற்றனர். குறிப்பாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருமான யூசுப் பதான் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் யூசுப் பதான் மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். அதேபோல், சஹாரன்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் 64,542 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கைரானாவைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் இக்ரா சவுத்ரி, பாஜக வேட்பாளர் பிரதீப் குமாரை விட 69,116 வாக்குகள் கூட பெற்று வெற்றி பெற்றார்.