மும்பை: பாபா சித்திக் மீது ஆறு முறை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும், மூன்று துப்பாக்கி குண்டுகள் பாபா சித்திக்கின் நெஞ்சு பகுதியில் பாய்ந்ததாகவும், இன்னொரு துப்பாக்கி குண்டு காரில் இருந்த இன்னொரு நபர் மீது பாய்ந்தது என்பதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மும்பை பாந்த்ரா கிழக்கு பகுதியில் நேற்று தமது மகன் ஜீஷான் சித்திக் அலுவலகம் அருகே நின்ற போது பாபா சித்திக் மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 எம்.எம் துப்பாக்கியை கொண்டு சுட்டப்பட்டார்: பாபா சித்திக் கொலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் பரம்ஜித் சிங் தாஹியா, " நிர்மல் நகர் பகுதியில் சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு மர்ம நபர்கள் பாபா சித்திக்கை துப்பாக்கியால் சுட்டிருக்கின்றனர். இதனையடுத்து அவர் லீலாவதி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்," என்றார். பாபா சித்திக்கை கொல்லப் பயன்படுத்திய 9 எம்.எம் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
நவீன துப்பாக்கி:இந்த நிலையில் பாபா சித்திக் கொலை வழக்கு குறித்து பேசிய போலீஸ் அதிகாரிகள்," குண்டு துளைக்காத காரில் பாபா சித்திக் பயன்படுத்தி வந்தார். எனவே, அவர் மீது துப்பாக்கியால் சுட்டவர்கள் குண்டு துளைக்காத காரையும் துளைக்கூடிய அதிநவீன துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர். மிகவும் நெருக்கமாக அவரை சுட்டுள்ளனர். அவரை சுட்ட மூன்று நபர்கள் கைகுட்டையால் தங்களது முகத்தை மறைத்திருந்திருந்தனர். அவர்களில் இரண்டு பேரை அங்கிருந்த பாபா சித்திக் ஆதரவாளர் துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து 13 ரவுண்ட்கள் சுடக்கூடிய துப்பாக்கி ஒன்றையும் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இதையும் படிங்க:அரசியல்வாதி சுட்டுக்கொலை: மும்பையில் அதிர்ச்சி சம்பவம்!
துப்பாக்கி மிகவும் நவீனமானதாகும். பாபா சித்திக் நின்றிருந்தபோது அந்த பகுதியில் விஜயதசமியை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு இசை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு கொலையாளிகள் பாபா சித்திக் மீது சுட்டுள்ளனர். இரண்டு வாரத்துக்கு முன்பு பாபா சித்திக்குக்கு கொலை மிரட்டல் வந்திருக்கிறது. இதையடுத்து அவருக்கு ஒய் வகை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாபா சித்திக் உடன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உடன் இருந்ததுள்ளார்," என்று கூறினர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்ச் ஏக்நாத் ஷிண்டே,, "விரைவு நீதிமன்றத்தில் பாபா சித்திக் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறும். இந்த வழக்கை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக் விசாரணை மேற்கொள்வார். மும்பை போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளனர். யார் ஒருவரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்படக் கூடாது. ரவுடிகளுக்குள் மோதல் என்பது திரும்பவும் வராது. இது போன்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,"என்றார்.
கொரோனா காலக்கட்டத்தில் ஏழைகளுக்கு உதவியவர்:கொலை செய்யப்பட்ட பாபா சித்திக் மிகவும் இரக்க குணம் மிக்கவர். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் முக்கிய உயிர் காக்கும் மருந்து பொருட்களை வாங்கி கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்குக் கொடுத்திருக்கிறார். மேலும் மும்பை திரை உலகிலும் பாபா சித்திக் மிகவும் பிரபலமாக திகழ்ந்தார்.
குறிப்பாக ஆண்டுதோறும் பாபா சித்திக் அளிக்கும் இஃப்தார் விருந்தில் முக்கியமான திரைப்பிரபலங்கள் தவறாமல் பங்கேற்பது வழக்கம். இதன்மூலம் சல்மான்கான்,ஷாருக்கான்,சஞ்சய் தத் ஆகியோரின் நெருங்கிய நண்பராகவும் பாபா சித்திக் திகழ்ந்தார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு பாந்த்ரா (மேற்கு) தொகுதியில் இருந்து மூன்று முறை வெற்றி பெற்றார்.2004ஆம் ஆண்டு உணவுத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
பாபா சித்திக் காங்கிரஸ் கட்சியில் மும்பை பிராந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மற்றும் மூத்த துணைத் தலைவர் மற்றும் மகாராஷ்டிர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் நாடாளுமன்ற குழு உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தவர். காங்கிரஸில் இருந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விலகிய பாபா சித்திக், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். எதற்காக தாம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
பாபா சித்திக் வருகையால் முஸ்லீம்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சற்றே அதிகரித்தது. பாபா சித்திக்கின் மகன் ஜீஷான் சித்திக் இப்போது காங்கிரஸ் எம்எல்ஏவாக இருக்கிறார்.