வயநாடு:கேரள மாநிலம் வயநாடு மேப்பாடி பகுதியில் உள்ள சூரல் மலைப்பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக நள்ளிரவு 1 மணியளவில் மேப்பாடு முண்டக்கை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது அதனை தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு சூரல்மலை என்ற இடத்தில் 2வது நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 70 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
மீட்புப்பணிகள் தீவிரம்:நேற்றிரவு முதல் அப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தற்போது நடந்து வருகிறது. மீட்பு குழுவினர் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட மக்களைத் தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் வீடுகள் பல சிக்கியுள்ளன. அதில் இருக்கும் மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நிலச்சரிவு மீட்பு பணிக்காக ஏற்கனவே கோவை மாவட்டம் சூலூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளுக்காகச் சென்றுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ராணுவத்தினர் வயநாடு பகுதிக்கு விரைந்துள்ளனர்.
100 குடும்பங்கள்:குறிப்பாக சூரல் மலையை சுற்றியுள்ள ஒரு சில கிராமங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியே வர முடியாத அளவிற்கு சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டு சிக்கித் தவித்து வருகின்றனர். குறிப்பாக அட்டமலை பகுதியில் 100 குடும்பங்கள் சிக்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.