திருவனந்தபுரம் :கேரளா மாநிலம் வயநாடு அடுத்த பூக்கோடு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தவர் சித்தார்த்தன். கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி விடுதி கழிவறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளார். மற்ற மாணவர்கள் ராகிங் செய்ததே மரணத்திற்கு காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய மாணவர்களின் கூட்டமைப்பு எஸ்எப்ஐ அமைப்பை சேர்ந்த சிலர் ராகிங் செய்ததாக சித்தார்த்தனின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர். மேலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் சித்தார்த்தனின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கிறது.
இதற்கிடையே இந்த மரணம் தொடர்பாக சில பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சீனியர்கள் மற்றும் சக மாணவர்கள் இணைந்து சுமார் 29 மணி நேரம் சித்தார்த்தனை தொடர்ந்து தாக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சித்தார்த்தனை சீனியர் மற்றும் சக மாணவர்களும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சித்திரவதை செய்து உள்ளதாகவும் தகவல் கூறப்பட்டு உள்ளது.
அதுவே அவரை தற்கொலைக்கு தூண்டியுள்ளதாகவும் கேரள அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து கேரள போலீசார் தங்கள் விசாரணை ஆவணத்தில், "பிப்ரவரி 16ஆம் தேதி காலை 9 மணி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி மதியம் 2 மணி வரை சித்தார்த்தனை கைகளாலும் பெல்ட்டாலும் சக மாணவர்கள் மற்றும் சீனியர் மாணவர்கள் தொடர்ந்து தாக்கி கொடூரமாக ராகிங் செய்ததாக கூறபட்டு உள்ளது. இதனால் சித்தார்த்தன் மன உளைச்சலுக்கு ஆளாகி, தொடர்ந்து இங்கே தங்கிப் படிக்கவும் முடியாது வீட்டிற்குச் செல்லவும் முடியாது என்ற அளவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவத்தில் சிபிஎம் மாணவர் அமைப்பினர் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த அமைப்பை சார்ந்த பலரை போலீசார் கைது செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :காஷ்மீரில் பிடிபி வேட்பாளர்கள் அறிவிப்பு! அனந்த்நாக்கில் மெகபூபா முப்தி போட்டி! காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? - Lok Sabha Election 2024