புதுடெல்லி: அம்பேத்கர் குறித்து அமித்ஷா கூறியது பற்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கும்படி இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு மாநிலங்களவையில் கடந்த 17ஆம் தேதி இரண்டாவது நாளாக அரசியலமைப்பு சட்டம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அம்பேத்கர், அம்பேத்கர் என்று கூறுவது ஒரு பாணியாக மாறி விட்டது. கடவுளின் பெயரை அவர்கள்(எதிர்க்கட்சியினர்) பல முறை கூறினால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்," என்று கூறியிருந்தார்.
இது அம்பேத்கரை அவமதிக்கும் செயல் என்று கூறி அமித்ஷா மன்னிப்புக் கேட்பது மட்டுமின்றி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து நேற்று விளக்கம் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "நான் அம்பேத்கரை அவமதிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிதான் பலமுறை அம்பேத்கரை அவமதித்துள்ளது. என்னுடைய பேச்சு திரித்து கூறப்பட்டுள்ளது," என்று கூறினார்.
இதனிடையே இன்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பே பாஜக கூட்டணி, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தனித்தனியே நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டித்து பாஜக உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜகவுக்கு போட்டியாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கருடன் தொடர்புடைய நீலநிற வண்ணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் உடை அணிந்து வந்திருந்தனர். பதாகைகளை ஏந்தியபடி மத்திய அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ராகுல் காந்தியால் கீழே விழுந்ததாக எம்பி புகார்: இது குறித்து பேசிய பாஜக எம்பி பிரதாப் சந்திரா சாரங்கி, "நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளே செல்லும் படிக்கட்டு அருகே நின்றிருந்தேன். அப்போது ராகுல் காந்தி வந்தபோது, ஒரு எம்பியை தள்ளி விட்டார். அந்த எம்பி என் மீது விழுந்ததால் நான் கீழே விழுந்து காயம் அடைந்தேன்," என்று கூறினார்.
#WATCH | Delhi | BJP MP Pratap Chandra Sarangi says, " rahul gandhi pushed an mp who fell on me after which i fell down...i was standing near the stairs when rahul gandhi came and pushed an mp who then fell on me..." pic.twitter.com/xhn2XOvYt4
— ANI (@ANI) December 19, 2024
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அஞ்சலி: இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் வழக்கம்போல இன்று காலை தொடங்கியது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனுககு அஞ்சலி செலுத்தும் வகையில் மக்களவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை அவமதித்தது குறித்து விவாதிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அவையை மதிய உணவு இடைவேளை வரை ஒத்தி வைப்பதாக மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா அறிவித்தார்.
#WineterSession2024
— SansadTV (@sansad_tv) December 19, 2024
Obituary References made by Lok Sabha Speaker passing away of E.V.K.S. Elangovan (Member, Fourteenth Lok Sabha).@ombirlakota @LokSabhaSectt @loksabhaspeaker pic.twitter.com/4t0RkST3re
மாநிலங்களவையிலும் அமளி: மாநிலங்களவை கூடியதும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் உறுப்பினர்களுக்கு அவை தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்துத் தெரிவித்தார். தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் தலைவர்கள் அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து பேசிய மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், விவாதம் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது குறித்து விவாதிக்க வலியுறுத்தி உறுப்பினர்கள் விதி 267ன் கீழ் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் உறுப்பினர் ஒருவர் நோட்டீஸ் கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அம்பேத்கர் அவமதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து மதிய உணவு இடைவேளை வரை மாநிலங்களவையை ஜகதீப் தன்கர் ஒத்தி வைத்தார்.