சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள ’விடுதலை 2’ திரைப்படம் நாளை (டிச.20) வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தின் சென்சார் சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023இல் வெளியான திரைப்படம் விடுதலை. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
வெற்றிமாறன் படங்களில் சமூகப் பிரச்சனைகள், ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை பேசுவது மையக் கருவாக இருக்கும். இந்நிலையில் விடுதலை முதல் பாகத்தில் கனிமவளங்கள் எடுக்க முடிவு செய்யும் அரசுக்கு எதிராக போராடும் மக்களை விஜய் சேதுபதி இயக்கமாக ஒன்றை உருவாக்கி வழிநடத்துகிறார். இதனால் அந்த இயக்கத்தை காவல்துறையை கொண்டு அழிக்க அரசு முயற்சி செய்கிறது. இதனையடுத்து காவல்துறையில் பணிபுரியும் சூரி மக்களுக்கு எதிராக செயல்படுகிறாரா அல்லது அரசுக்கு எதிராக செயல்படுகிறாரா என்பதே கதை. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் சூரியின் திரை வாழ்க்கை விடுதலைக்கு படத்திற்கு முன், விடுதலைக்கு பின் என பிரிக்கலாம். அந்த அளவிற்கு வித்தியாசமான சூரியின் நடிப்பை நாம் திரையில் பார்க்க முடிந்தது. விடுதலைக்கு பிறகு பல படங்களில் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் ’விடுதலை 2’ திரைப்படம் நாளை (டிச.20) திரைக்கு வருகிறது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
#ViduthalaiPart2 Certified 'A' 🔞
— AmuthaBharathi (@CinemaWithAB) December 17, 2024
Runtime - 2hrs 52Mins👀
Censored muted some political dialogues & Abusive words !! pic.twitter.com/ZQoqkQfrDM
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விடுதலை 2 நாளை வெளியாகும் நிலையில், படத்தின் சென்சார் சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. விடுதலை 2 சென்சார் செய்யப்பட்டு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் நேரம் 2 மணி, 52 நிமிடங்கள் ஆகும். இந்நிலையில், விடுதலை 2 படத்தில் ஆபாச வார்த்தைகள் இருப்பதாகவும், அவற்றை நீக்க வேண்டும் என படக்குழுவினரிடம் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது. மேலும் எந்த ஒரு அரசியல் கட்சிகளின் பெயர்களையும் படத்தில் காண்பிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 2024இல் இளைஞர்களை வைப் செய்ய வைத்த சிறந்த ஆல்பம் பாடல்கள்! - BEST ALBUMS 2024
அதேபோல் வசனங்களை பொறுத்தவரை “பிரச்சனையை தீக்குறதுக்கான ஆயுதங்களை மக்களே அந்தந்த போராட்ட காலங்களிலிருந்து உருவாக்கிக்கணும்” என்ற வசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும் எனவும் சென்சார் போர்டு விடுதலை 2 படக்குழுவினரிடம் பரிந்துரை செய்துள்ளது. 'விடுதலை 2' திரைப்படம் நாளை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.