மும்பை: அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலா தளமான எலிபெண்டா தீவிற்கு 100க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு சென்ற பயணிகள் கப்பல் மீது கடற்படையை சேர்ந்த கப்பல் மோதியதாகக் கூறப்படுகிறது. இன்று பிற்பகல் 3:55 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் பலத்த சேதமடைந்த பயணிகள் கப்பல் கடலில் கவிழ்ந்தது. இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் தொடங்கின.
இதுகுறித்து இந்தியக் கடற்படை செய்தித் தொடர்பாளர் தனது எக்ஸ் பக்கத்தில் " இந்தியக் கடற்படை படகு ஒன்று மும்பை துறைமுகத்தில் இன்ஜின் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக படகு கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இதனால், அந்த படகு பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் மீது மோதியது. இதில் பயணிகள் கப்பல் கவிழ்ந்தது. 4 கடற்படை ஹெலிகாப்டர்கள், 11 கடற்படைக் கப்பல்கள், ஒரு கடலோர காவல்படை படகு மற்றும் மூன்று கடல் போலீஸ் கிராஃப்ட் ஆகியவை மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன்" என பதிவிட்டுள்ளார்.
The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the boat mishap in Mumbai. The injured would be given Rs. 50,000. https://t.co/EPwReaayYk
— PMO India (@PMOIndia) December 18, 2024
இதுதொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது, "நீலக்கமல் என பெயர் கொண்ட பயணிகள் கப்பல் மீது கடற்படைக்குச் சொந்தமான படகு மோதியது. இந்த சம்பவம் இன்று மாலை 3.55 மணிக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக மீட்புப் பணி தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி 101 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எதிர்பாராதவிதமாக 13 உயிரிழந்துள்ளனர். இவர்களில் 13 பேரில் 10 பேர் பொதுமக்கள், 3 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்.
இன்னும் 2 பேர் ஆபத்தான நிலையில் கடற்படைக்குச் சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும். இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் கடற்படை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என கூறினார்.
இந்தநிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"மும்பையில் படகு விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக ரூபாய் 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.