ஸ்ரீநகர்: காஷ்மீர் புல்வாமா மாவட்டம் போஷ்வான் கிராமத்தைச் சேர்ந்த ஆசாத் யூசுப் குமாருக்கு (31) திருமணமாகி 4 மாத ஆண் குழந்தை உள்ளது. ஆசாத் சில ஆண்டுகள் துபாயில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் தனது சொந்த கிராமத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து வந்தார்.
ஆசாத் மும்பையைச் சேர்ந்த யூடியூபர் ஃபைசல் கான் நடத்தி வரும் ‘baba vlogs’ மூலம் தனக்கு துபாயில் வேலை கிடைத்துள்ளதாக தனது குடும்பத்தாரிடம் கூறி துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளார். துபாய் சென்ற பிறகு தான் ரஷ்யா, உக்ரைன் போரில் ரஷ்யா ஆயுதப்படை வீரராக அழைத்து செல்லவுள்ளனர் என தெரியவந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. பின்னர் ரஷ்ய எல்லைக்கு உக்ரைன் நாட்டுடன் போர் புரிய ஆசாத்துடன் சேர்த்து 12 இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
இதேபோல், ஆசாத்துடன் சேர்த்து குப்வாரா மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு இந்திய இளைஞர் சாகூர் அகமது உள்ளிட்ட பலரை baba vlogs யூடியூப் சேனல் நடத்தி வரும் ஃபைசல் கான் ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து புல்வாமா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து ஆசாத்தின் குடும்பத்தினர் இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் ஆசாத்தை மீட்டுத் தருமாறு புகார் அளித்துள்ளது.
இதுகுறித்து, ஈடிவி பாரத் இணையதளத்திற்கு பேட்டி அளித்த ஆசாத்தின் தாயார் ராஜா, "எனக்கு ரஷ்யா நாட்டை பற்றி தெரியாது, அது எங்குள்ளது என்று கூட தெரியாது. எங்களுக்கு ஊடகத்தின் மூலம் தான் தனது மகன் அங்கு சிக்கியுள்ளது தெரியவந்தது. எனது மகனை காப்பாற்றி இந்தியாவை அழைத்து வர வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.