தஞ்சாவூர்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதானியை சந்தித்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிக்கை வெளியிட்டிருந்தார். இதனை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, "அவருக்கு வேறு வேலை இல்லை, தினமும் ஒரு அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார். அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார்.
முதலமைச்சரின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்த அன்புமணி ராமதாஸ்,"டாக்டர் ராமதாஸ் குறித்து பேசியதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், பா.ம.க தொண்டர்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, சேலம், கரூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டயர்களை எரித்து போராட்டம்: திருப்பத்தூர் ஹவுசிங்போர்டு பகுதியில் தமிழக முதலமைச்சரை கண்டித்து 70க்கும் மேற்பட்ட பாமகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில், திடீரென பாமகவினர் சிலர் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி திருப்பத்தூர் - தர்மபுரி சாலையில் சென்ற அரசு பேருந்து மறித்து, சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் 30க்கும் மேற்பட்ட போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: நெல்லையில் இளைஞர் படுகொலை....சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் போலீசார் விசாரணை!
சாலை மறியலில் ஈடுபட முயன்ற பாமகவினர்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாமகவின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் அருள் எம்எல்ஏ தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சரை கண்டித்து கோசங்களை எழுப்பிய பாமகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால், போலீஸாருக்கும் பாமகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து அருள் எம்எல்ஏ உள்பட பாமகவினர் சாலையில் அமர்ந்து ராமதாஸ் குறித்த கருத்திற்கு முதலமைச்சர் மன்னிப்பு கோர வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் குண்டு கட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி அருகே இருந்த தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதே போல் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, தஞ்சை வடக்கு மாவட்ட பாமக சார்பில், மாவட்ட செயலாளர் ம.க ஸ்டாலின் தலைமையில் பாமக மற்றும் கருப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்