டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் மற்றும், எம்எல்சி கவிதாவை கடந்த மார்ச் 15ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. முறைகேடு வழக்கில் கவிதாவை 7 நாட்கள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
தொடர்ந்து மேலும் 3 நாட்களுக்கு அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அமலாக்கத் துறை காவல் முடிந்து மார்ச் 26ஆம் தேதி கவிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கவிதா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
கவிதாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஏப்.9) நிறைவடைய உள்ள நிலையில், அமலாக்கத் துறை அவரை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தியது. அப்போது கவிதாவின் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க அமலாக்கத் துறை சாரிபில் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஏப்ரல் 23ஆம் தேதி வரை காவலை நீடித்து உத்தரவிட்டார்.