சண்டிகர்: அரியானா மாநிலம் கர்னல் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் நவ்ஜித் சந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் எம்.டெக் படிப்பில் சேர கல்வி விசாவில் ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார். அங்குள்ள மெல்போர்ன் நகரில் தங்கி எம்.டெக் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (மே.4) இந்திய மாணவர்களுக்கு இடையிலான சண்டையை தடுக்க முயன்ற போது நவ்ஜித் சந்து கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய நவ்ஜித் சந்துவின் மாமா யஷ்வீர், நண்பர் கேட்டுக் கொண்டதன் பேரில் அவரை அழைத்து வர நவ்ஜித் காருடன் சென்றுள்ளார். அப்போது நண்பரின் வீட்டில் சக இந்திய மாணவர்களுக்கு இடையே வீட்டு வாடகை தொகையை பிரிப்பதில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க முயன்ற போது சக மாணவர் கத்தியால் குத்தியதில் நவ்ஜித் சந்து நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதில் நவ்ஜித் சந்து பரிதாபமாக உயிரிழந்ததாக அவரது மாமா யஷ்வீர் தெரிவித்துள்ளார். நவ்ஜித் சந்துவுடன் சேர்த்து கத்திக் குத்து சம்பவத்தில் மற்றொரு இளைஞரும் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தியால் குத்திய இளைஞரும் அரியானா மாநிலம் கர்னல் பகுதியைச் சேர்ந்தவர் என நவ்ஜித் சந்துவின் மாமா தெரிவித்துள்ளார்.