தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

7 மாநில இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி அபார வெற்றி.. பீகாரில் ஷாக் கொடுத்த சுயேச்சை வேட்பாளர்! - INDIA Bloc victory in by poll - INDIA BLOC VICTORY IN BY POLL

Assembly by-polls results: தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களின் 13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி 10 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ராகுல் காந்தி, மோடி (கோப்புப்படம்)
ராகுல் காந்தி, மோடி (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 7:01 PM IST

சென்னை: தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் பீகார் ஆகிய 7 மாநிலங்களின் 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 10 தொகுதிகளிலும் பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் உறுதிபடுத்தியுள்ளது.

மேற்கு வங்க இடைத்தேர்தல்:திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தின் மணிக்தலா, பாக்தா, ரனாகாட் தக்ஷின் மற்றும் ராய்கஞ்ச் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், ராய்கஞ்ச் தொகுதியில் டிஎம்சி வேட்பாளர் கிருஷ்ண கல்யாணி பாஜகவின் மானஸ் குமார் கோஷை 50,077 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

ரனாகாட் தக்ஷினில் டிஎம்சி வேட்பாளர் முகுத் நமி 74,485 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் மனோஜ் குமார் பிஸ்வாஸை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். அதை தொடர்ந்து, பாக்தாவிலும் டிஎம்சியின் மதுபர்ணா தாக்கூர், பாஜகவின் பினய் குமார் பிஸ்வாஸை 74,251 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாக்தாவில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், கடைசி கட்டத்தில் மணிக்தாலாவில் டிஎம்சியின் சுப்தி பாண்டேவும் வெற்றி பெற்ற நிலையில் தேர்தல் நடந்த நான்கு தொகுதிகளையும் டிஎம்சி தக்க வைத்துக்கொண்டது. மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி இந்தியா கூட்டணியோடு இல்லையென்றாலும் வெளியில் இருந்தவாறு ஆதரவு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் சட்டசபை இடைத்தேர்தல்: ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இங்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தனித்தனியே நின்றன. இந்த நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையில், ஆம் ஆத்மி கட்சியின் மொஹிந்தர் பகத் 37.325 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரான சுரீந்தர் கவுரை தோற்கடித்துள்ளார்.

​117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சிக்கு தற்போது 91 எம்எல்ஏக்கள் உள்ளனர். முன்னதாக, இந்த தொகுதியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ-வாக இருந்த ஷீத்தல் அங்கூரல் பாஜகவுக்கு தாவியதால் இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேச சட்டசபை இடைத்தேர்தல்: பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் அமர்வாரா சட்டமன்றத் தொகுதியில் கடுமையான போட்டிக்கு பிறகு பாஜக வேட்பாளர் கம்லேஷ் பிரதாப் ஷாஹி 3,207 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தீரன் ஷாவை தோற்கடித்தார்.

இமாச்சல சட்டமன்ற இடைத்தேர்தல்:காங்கிரஸ் ஆளும் இமாச்சல பிரதேசத்தில் ஹமிர்பூர், டெஹ்ரா, நலகர் ஆகிய மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில், டேரா மற்றும் நலகர் ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன. ஹமிர்பூர் தொகுதியில் மட்டும் பாஜகவின் ஆஷிஷ் சர்மா, காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பேந்தர் வர்மாவை 1,571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். டெஹ்ரா தொகுதியில், முதல்வர் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர் 9 ஆயிரத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

உத்தரகாண்ட்:பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் மங்க்லாயுர், பத்ரிநாத் ஆகிய இரு தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பத்ரிநாத் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் லக்பத் சிங் புடோலா 5,224 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ராஜேந்திர சிங் பண்டாரியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். மங்க்லாயுர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் நிஜாமுதீன் கடைசி சுற்றில் 422 வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கர்தார் சிங் பதானாவை தோற்கடித்தார்.

பீகார் இடைத்தேர்தல்:பீகார் மாநிலம் ருபாலி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் கட்சி (ஜேடியு) வேட்பாளர் கலாதார் பிரசாத் மண்டலை சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர் சங்கர் சிங் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக, சங்கர் சிங் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய அமைச்சர் சிரக் பஸ்வானின் லோக் ஜனசக்தியில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில், சுயேச்சையாக அவரது வெற்றி பீகார் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு இடைத்தேர்தல்: விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை வீழ்த்தி பெற்றுள்ளார். இந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிட்டுள்ளது. அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்து யாருக்கும் ஆதரவில்லை என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்.. அதிமுகவின் வாக்குகள் யாருக்கு சென்றது?

ABOUT THE AUTHOR

...view details