சென்னை: குற்றம் சாட்டப்பட்டவரின் செல்போனில் ஐந்து பெண்களின் வீடியோ இருப்பது குறித்த ஆய்வு செய்யஒரு குழு அமைத்திருக்கிறோம். இதன் வாயிலாக யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் இந்தக் குழுவில் புகார் தெரிவிக்கலாம். பாதுகாப்பான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிக்கு ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தும், அதனை வீடியோவாக எடுத்து மிரட்டிதாகவும் நேற்று புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் அதேபகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், "அண்ணா பல்கலைக்கழகத்தில் துரதிஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.. முதல் கட்டமாக மாணவர்களோ, பெற்றோர்களோ, பொதுவானவர்களோ பல்கலைக்கழகத்தை அணுகும் போது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் யாரை அணுக வேண்டும் என்பதில் குழப்பம் உள்ளது.
முழு ஒத்துழைப்பு:
இந்த குழப்பம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் ஆங்காங்கே ஹெல்ப் டெஸ்க் அமைக்கப்பட்டுள்ளது. தகாத நபர் விரும்பாத காரியத்தை செய்ததன் விளைவாக, கடந்த 23ஆம் தேதி சம்பவம் நடைபெற்றது. 25ஆம் தேதி மாணவி கொடுத்த புகார் வந்தது. அந்த புகார் பெற்ற குறுகிய நேரத்திலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அதன் மீதான விசாரணையும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
அவர் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில், கமிட்டி அமைத்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.. தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கில் உள் நுழைந்து இந்த வழக்கை விசாரிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். அதற்கும் தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும், உயர்கல்வித்துறையும் முழு ஒத்துழைப்பு தந்துள்ளது.
புகார் பல்கலை குழுவிற்கு வரவில்லை:
சட்டத்தை தன் கையில் எடுத்து விசாரணை நடந்து கொண்டிருக்கக்கூடிய சூழலில் எந்த நிலையிலும் அரசியலாக ஆதாயம் தர வேண்டிய சூழல் தமிழக அரசுக்கு இல்லை. இந்த சம்பவத்தை ஒரு படிப்பினையாக வைத்து அதற்கான இடங்களை ஆய்வு செய்தோம். பல்கலைக்கழக நிர்வாக குழு பல்கலைக்கழகத்தின் நுழைவாயில், கேமராக்கள், இரவு நேரத்தில் பயன்படுத்தக்கூடிய விளக்குகள் உள்ளிட்ட ஆய்வுகள் மேற்கொண்டோம்.
அரசியல் ஆதாயம் தேடக்கூடியவர்களுக்கு விளக்கம் தரவேண்டியது அரசின் கடமை. பாலியல் இடர்பாடு ஏற்பட்டு மாணவி புகார் தந்தார். நடவடிக்கை திறமையான விசாரணையை மேற்கொள்வதற்காக பல்கலைக்கழக நிர்வாக குழு ஒரு குழுவை உருவாக்கியது. ஆனால் இப்படி ஒரு புகார் பல்கலைக்கழகத்தில் உள்ள குழுவிற்கு வரவில்லை என்பதுதான் உண்மை. பல்கலைக்கழகத்தின் கல்வித் திறனை எப்படி ஆய்வு செய்து வருகிறோமோ, அதேபோல பல்கலைக்கழகத்தின் குழுக்களையும் ஆய்வு செய்து இதன் மீதான விசாரணை மேற்கொள்ளப்படும்.
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்:
சம்பவம் நடந்த நேரம் இரவு எட்டு மணி. குற்றவாளி நபர் அடிக்கடி வந்து போகக்கூடிய பழக்கத்தையும் வைத்துள்ளார். இதனை பல்கலைக்கழக காவலாளிகள் தெரிவிக்கிறார்கள். அதேபோல குற்றவாளியின் மனைவியும் இதே பல்கலைக்கழகத்தில் துப்புரவு பணியாளராக இருக்கிறார். பல்கலைக்கழக நேரங்களை தவிர உரிய அடையாள அட்டையை காட்டி பதிவு செய்துவிட்டு தான் உள்ளே வர முடியும்.
வாகனங்களில் வந்தாலுமே கூட சிசிடிவி கேமராக்கள் மூலமாக படம் எடுத்துக் கொள்ளப்படும், வாகனங்களின் எண்களும் கண்காணிக்கப்படுகிறது. சம்பவத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை. சம்பவம் நடந்தது நடந்தது தான். இதன் மீதான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் குற்றவாளியின் மனைவியின் பங்கு இருக்கிறதா என்பது விசாரணையில் தான் தெரியும். முழு அளவில் குற்றவாளியை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இனி இதுபோன்று நடக்காது:
அண்ணா பல்கலைக்கழகத்தில் POSH (prevention of sexual harassment cell) கமிட்டி உள்ளது. ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக கமிட்டிக்கு புகார் வரவில்லை. இனி இதுபோன்ற சம்பவம் நடக்காது என்பதற்கு முழு உத்தரவாதம் தருகிறேன். வாரத்திற்கு ஒருமுறை கமிட்டியின் மூலமாக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். சிசிடிவி கேமரா நுழைவாயிலும், விடுதியிலும், சாப்பிடக்கூடிய உணவகத்திலும், சாலைகளிலும் பெரும்பாலும் பொருத்தப்பட்டுள்ளது. 100ல் 80 கேமராக்கள் சரியாக உள்ளது 10 - 20-ல் மட்டுமே குறைபாடுகள் உள்ளன.
ஆனால் சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி உட்படுத்த முடியாத ஒரு பகுதியாக உள்ளது. அதனால் எந்த இடமும் இருட்டாக இருக்கக் கூடாது. வெளிச்சமாக இருக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மின் விளக்குகள் வைக்கப்படும். காவல்துறை மற்றும் தேசிய மகளிர் அணி விசாரணைக்கு பல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வித்துறை முழு ஒத்துழைப்பு தரும். இதில் நல்ல பெயர் எடுத்தால் மட்டுமே ஆளுங்கட்சிக்கு ஒரு வகையில் அரசியல் ஆதாயம் என்று எண்ணக்கூடியவர் நான்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!
எஃப்ஐஆரில் கூறப்பட்ட சார் என்பவர் யார்?
எஃப்ஐஆரில் கூறப்பட்ட சார் என்கிற வார்த்தைக்கு உரியவர் யார்? ஆடி கார் உள்ளது சார் என்கிற வார்த்தை ஆகியவை முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. எஃப்ஐஆருக்கும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்குமான வேறுபாடு அனைவரும் அறிந்தது. இது மீதான முழு விசாரணை நடைபெறும். கார் உள்ளது, சார் யார் என்பது ஆராய்வது குந்தகத்தை ஏற்படுத்தும். மேலும், குற்றவாளியின் செல்போனில் ஐந்து பெண்களின் வீடியோ இருப்பது குறித்த ஆய்வு செய்யஒரு குழு அமைத்திருக்கிறோம். இதன் வாயிலாக யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் இந்தக் குழுவில் புகார் தெரிவிக்கலாம். பாதுகாப்பான முறையில் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனவரிக்குள் அனைத்தும் சரி செய்யப்படும்:
எந்த நேரத்தில் யார் அழைத்தாலும் புகார் வரக்கூடிய வகையில் செல்பேசி அமைக்கப்படும். அதற்கு பேராசிரியர், பதிவாளர் மாணவ பிரதிநிதிகள் உள்ளடக்கிய நபர்கள் இந்த குழுவில் இடம் பெற்று இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உளவியல், மருத்துவர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்கலைக்கழகத்தில் அவரது மனைவி பணியாற்றுவதால் பழக்கப்பட்ட ரீதியில் ஞானசேகரன் உள்ளே வருவதுதான் உண்மை. இத்தனை பெரிய சம்பவத்திற்கு பிறகு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள் மீது நடவடிக்கை கண்டிப்பாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தை முன்னுதாரணமாக வைத்துக்கொண்டு அனைத்து பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஜனவரி மாதத்திற்குள் அனைத்து புகார்களும் நிவர்த்தி செய்யப்படும்" என உறுதியாகத் தெரிவித்தார்.