திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட 350 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த வாணியம்பாடி கிராமிய போலீசார், வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பராமரிப்பு பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த கார், சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாயுள்ளது. இதில், காரை ஓட்டிவந்த நபர் காரிலிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்நிலையில், அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த வாணியம்பாடி கிராமிய போலீசார், காரில் இருந்து தப்பியோடியவரை விரட்டி பிடித்துள்ளனர். தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாசாராம் என்பதும், இவர் கர்நாடக மாநிலங்களிலிருந்து கார் மூலமாக 25 மூட்டைகளில் 350 கிலோ, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 'போதைப்பொருள் வழக்கில் தொடர்பில்லை'.. மன்சூர் அலிகான் மகன் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவு!
இதனையடுத்து, 350 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீசார், நாசாராம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில், கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு போதைப்பொருட்களை கடத்தி வந்த கார் சாலையோர தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் வாணியம்பாடியில் புகையிலை பொருள்களை கடத்தி வரப்பட்ட கார் விபத்துக்குள்ளாகி, அதிலிருந்து 350 கிலோ புகையிலைப் பொருள்கள் சிக்கிய சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே கர்நாடகா-தமிழக எல்லையில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.