பெலகாவி: கட்சியின் தலைமை கட்டமைப்பு, கட்சியின் உத்திகள் குறித்து விவாதிக்க நவ் சத்தியாகிரகா என்ற தலைப்பில் கர்நாடகா மாநிலம் பெலகாவியில் காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாள் காரியகமிட்டி கூட்டம் தொடங்கி உள்ளது.
2025ஆம் ஆண்டு கட்சியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், கட்சியின் தேசிய அளவிலான தலைவர்கள், மாநில தலைவர்கள், பொறுப்பாளர்கள் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது.
தலைமையை பொறுப்புகளில் மாற்றம்?: டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படும் தகவல்களின்படி முன்னாள் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெய்லட் புதிய தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. ஹிந்தி பேசும் மாநிலங்களில் வாக்கு வங்கியை குறிவைத்து அசோக் கெய்லாட் தேசிய பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இப்போதைய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கேரளா அரசியலுக்கு திரும்புவார் என்று தெரிகிறது. அநேகமாக அவர் கேரள மாநில தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 2004 டிச.26.. கோரத்தாண்டவம் ஆடிய ஆழிப்பேரலை... உறவுகளை கடலுக்கு பறிகொடுத்துவிட்டு இன்றும் தீரா துயரத்தில் வாழும் குமரி மக்கள்!
தேர்தல் பரப்புரை, டெல்லி அரசியல் இரண்டிலும் கைதேர்ந்தவர் அசோக் கெய்லாட் என்று மேலிடம் கருதுகிறது. அதே போல சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல், முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மாக்கான், மகாராஷ்டிராவின் முகுல் வாஸ்னிக் ஆகியோருக்கு பதவிகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தேசிய அளவிலான கட்சி பதவிகள், 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தலைவர்கள், பொறுப்பாளர்களை மாற்றுவது என்றும் இந்த காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
டெல்லி தேர்தலுக்கு பொறுப்புகள்: கர்நாடகா மாநிலத்தில் கடைசியாக தேசிய மாநாடு கட்நத 1924ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் மகாத்மா காந்தி தேசிய தலைவராகத்தேர்வு செய்யப்பட்டார். இதை நினைவு கூறும் வகையில்தான் இரண்டுநாள் நிகழ்வை பெலகாவியில் நடத்துவது என தேசிய தலைமை முடிவு செய்தது.இதனைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியலமைப்பு சட்டம் என்ற கருத்தாக்கத்தின் படி பெலகாவியில் பொது கூட்டம் ஒன்றையும் காங்கிரஸ் நடத்த உளளது.
ராஜஸ்தான் பெரும் அரசியல் செல்வாக்கு உள்ள அசோக் கெய்லாட், சச்சின் பைலட், கோவிந்த் சிங் தோதாஸ்ரா ஆகியோர் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வரவிருக்கும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி வாரியாக பணியாற்றுவதற்கு ராஜஸ்தான் மாநில தலைவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்கள் உட்பட 35 தலைவர்கள் டெல்லி தேர்தலுக்கு தொகுதி வாரியாக பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.