டெல்லி: வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக மாற்ற இலக்கு வைத்துள்ளதாகவும், உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 300 மில்லியனை (30 கோடி) எட்டும் எனவும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு விண்வெளி தொழில்கள் சங்கம் (GIFAS) டெல்லியில் ஏற்பாடு செய்த மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அம்மாநாட்டில் அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு மேலும் பேசியதாவது:
"விமானப் போக்குவரத்து மேலாண்மை மற்றும் நிலைத்தன்மை போன்ற தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி, இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. புதிய விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கும், ஏற்கெனவே உள்ள விமான நிலையங்களை விரிவுபடுத்துவதற்கும் முதலீடுகள் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் பெரிய விமான நிலையங்கள் உலகளாவிய பெரிய மையங்களாக மாறியுள்ளன.
இதையும் படிங்க:சென்னை மெரினாவில் நடந்தது என்ன?: ஆச்சர்ய நிகழ்வு அயர்ச்சியாக்கிய கதை
இந்திய விமானப் போக்குவரத்து நாட்டின் மக்கள் தொகை, புவியியல் பரப்பு, பொருளாதாரம் ஆகிய காரணங்கள் அடிப்படையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. விமானப் போக்குவரத்துத் துறையை, வணிகச் சூழலுக்கு உகந்ததாக உருவாக்க இந்திய அரசு கொள்கை சீர்திருத்தங்களை செயல்படுத்தியுள்ளது. அதேபோல் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது." என்றார்.
இந்நிகழ்ச்சியில், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியரி மாத்து பேசுகையில், "தொழில் துறையின் வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது பிரான்ஸுக்கு கிடைத்த பாக்கியம். இந்திய விண்வெளித் துறைக்கான பிரெஞ்சு ஏற்றுமதிகள் அபரிமிதமாக வளர்ந்துள்ளன.
பிரெஞ்சு நிறுவனங்கள் முதலீடு செய்து, உள்நாட்டில் உற்பத்தி செய்து, இந்திய நிறுவனங்களை தங்கள் விநியோகச் சங்கிலிகளில் ஒருங்கிணைத்து வருகின்றன. 60-க்கும் மேற்பட்ட பிரெஞ்சு நிறுவனங்கள் இந்தியாவில் அலுவலகங்களை நிறுவியுள்ளன. விமானம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதுமையான திட்டங்களில் பிரான்சும், இந்தியாவும் இணைந்து செயல்படுகின்றன. புதுமை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக இரு நாடுகளும் இணைந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்