புதுடெல்லி:முதுகலை நீட் கலந்தாய்வை உரிய நேரத்தில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் (IMA) மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில், "நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு காரணமாக நீட் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தாமதம், நாடு முழுவதும் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மருத்துவ மாணவர்களை கடுமையாகப் பாதிப்படையச் செய்துள்ளது. ஏனென்றால், அவர்கள் முதுகலை மருத்துவப் படிப்பிற்குத் தகுதி பெற கடுமையாக உழைத்துள்ளனர். நீதிமன்றத்தின் நடைமுறை காரணமாக இவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை மாணவர்களின் தேவை முக்கியம் என்ற சூழலில், முதுகலை பயிற்சி மருத்துவர்களின் பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இது சுகாதார நிறுவனங்களின் செயல்பாட்டைப் பாதிக்கிறது.
இதையும் படிங்க: "ஹரியானாவில் ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்ப்பு" - வானதி சீனிவாசன்!
மேலும், முதுகலை மாணவர்களின் சேர்க்கை தாமதமாவதால், சுகாதார நிறுவனங்கள் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் நிலை உள்ளது. இந்த விவகாரத்தில் சட்டரீதியிலான தெளிவு அவசியம் என்பதற்காக நீதிமன்ற நடைமுறைகளை ஐஎம்ஏ மதிக்கிறது. எனவே, இந்த வழக்கை விரைவாகத் தீர்ப்பதற்கான வழியை கண்டறிய உச்ச நீதிமன்றம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
அதே நேரம், மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாததை உறுதிப்படுத்தச் சாத்தியமுள்ள தீா்வை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேற்கொள்வது அவசியம். எனவே, முதுகலை மருத்துவக் கலந்தாய்வை துவங்குவதற்கான இடைக்கால நடவடிக்கைகளை அனுமதிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தையும் அணுகி உரிய தீர்வை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எடுக்க வேண்டும்.
நீண்ட தாமதம் என்பது முதுகலை மருத்துவக் கல்வி நடைமுறைகளையும், சிறப்பு மருத்துவர்கள் நியமனம் மற்றும் அவர்களுக்கான ஒட்டுமொத்த பயிற்சிகளையும் கடுமையாக பாதிக்கும். ஆகையால், மாணவர்கள் மற்றும் சுகாதார அமைப்பின் நலன் கருதி உடனடியாக கவுன்சிலிங்கை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்" என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்