வாரணாசி: மக்களவை தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி 3வது முறையாக போட்டியிடுகிறார். வாரணாசியில் பிரதமர் மோடி நேற்று (மே.14) வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தொடர்ந்து தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, பிரசாரக் கூட்டங்களில் ஊடுருவல்காரர்கள் மற்றும் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வார்கள் என தெரிவித்தது குறித்து விளக்கம் அளித்தார்.
பிரசாரக் கூட்டங்களில் இஸ்லாமியர்கள் குறித்து மட்டும் தான் பேசவில்லை என்றும் அனைத்து ஏழைக் குடும்பங்கள் குறித்தும் தான் பேசியதாகவும், இந்து - இஸ்லாம் என பிரித்து பாகுபாடு காட்டி பேசத் தொடங்கினால் தான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்றும் தெரிவித்தார்.
ரதொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இஸ்லாமியர்கள் மீதான தனது அன்பை கூவி விற்க விரும்பவில்லை என்றும் தான் வாக்கு வங்கிக்காக ஒரு போது பணியாற்ற மாட்டேன் என்றும் கூறினார். மேலும், அனைவருக்குமான நாடு எல்லோரது வளர்ச்சிக்குமானது என்பதில் தான் நம்பிக்கை கொண்டவன் என்று பிரதமர் மோடி கூறினார்.
அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள் குறித்து தான் பேசியதாக வெளியான கருத்து இஸ்லாமியர்களை சுட்டுக் காட்டுவதாக வெளியானது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், இஸ்லாமியர்கள் ஏன் இவ்வளவு அநியாயம் நிகழ்த்தப்படுகிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த நிலை ஏழைக் குடும்பங்களை சார்ந்தது என்றும் வறுமை இருக்கும் இடத்தில், அவர்களின் சமூக வட்டத்தைப் பொருட்படுத்தாமல், அதிக குழந்தைகள் உள்ளனர் என்றார்.
மேலும் இந்த விவகாரத்தில் தான் இந்து அல்லது முஸ்லீம் என்று யாரையும் குறிப்பிடவில்லை என்றும் ஒருவர் எவ்வளவு குழந்தைகளை பெற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தான் கூறியதாகவும் அதேநேரம் உங்கள் குழந்தைகளை அரசு பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை வர வேண்டாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.