டெல்லி:நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் வருமான வரியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி புதிய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்திருக்கும் நபர்களுக்கு நிலையான கழிவு (Standard Deduction) 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அதேநேரம் பட்ஜெட்டில் பழைய வருமான வரி திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனக் கூறினார். தற்போதைய மத்திய பட்ஜெட் அறிவிப்பின் படி, புதிய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்யும் நபர்களுக்கு 3 லட்சம் வரை வரி கிடையாது. 3 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை - 5 சதவீதம் வரி, 7 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை 10 சதவீதம் வரி, 10 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை 15 சதவீதம் வரி, 12 லட்சம் முதல் 15 லட்ச ரூபாய் வரை 20 சதவீத வரி மற்றும் 15 லட்ச ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும், புதிய வருமான வரி திட்டத்தில் 3 லட்ச ரூபாய் வரை வரி இல்லை என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், ரூ.3 முதல் ரூ.6 லட்சம் வரை 5% வரியும், ரூ.6 முதல் ரூ.9 லட்சம் வரை 10% வரியும், ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை - 15% வரியும், ரூ.12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை 20% வரியும், ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வரை வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போதைய பட்ஜெட்டில் பழைய வருமான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 2025 ஆம் நிதியாண்டு வரை தற்போதைய நிலையே தொடரும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி, மூத்த குடிமக்களான 60 முதல் 80 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரை வரி இல்லை.
80 வயதுக்கு மேலான சிறப்பு மூத்த குடிமக்களுக்கு ஆண்டு வருமானம் 5 லட்ச ரூபாய் வரை இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் வரை வரி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி செலுத்த தேவையில்லை.
அதேநேரம், 2 லட்சத்து 50 ஆயிரம் முதல் 5 லட்ச ரூபாய் வரை 5% வரி விதிக்கப்படும் என்றும், 5 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரை 20% வரி மற்றும் 10 லட்ச ரூபாய்க்கு மேல் 30% வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு புதிய வரிமுறைகளை மத்திய அரசு கடைபிடித்து வரும் நிலையில் மாத சம்பளம் வாங்குவோர் கூடுதலாக எவ்வளவு சேமிக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் புதிய வருமான வரி திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளால், மாத சம்பளம் வாங்குவோர் செலுத்தவிருக்கும் வரியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ஆண்டு வருமானம் 9 லட்ச ரூபாய் வரை இருக்கும் நபர்களுக்கு நிலையான கழிவு தொகை 75 ஆயிரம் ரூபாய் போக மீதம் 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். அதில் 3 லட்ச ரூபாய் வரை அவர்கள் வரி செலுத்த தேவையில்லை. 3 லட்சம் முதல் 7 லட்ச ரூபாய் வரை 5 சதவீதம் வரியின் அடிப்படையில், கூடுதல் 4 லட்ச ரூபாய்க்கு 20 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டி இருக்கும்.
அதேபோல் 7 லட்சம் முதல் 9 லட்ச ரூபாய் வரை 10 சதவீத வரியின் அடிப்படையில் கூடுதலாக 2 லட்ச ரூபாய்க்கு ஆண்டுக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் வரி செலுத்த வேண்டி வரும். இதுதவிர்த்து பொது வரி 32 ஆயிரம் ரூபாய் உடன் 4 சதவீத செஸ் வரி ஆயிரத்து 300 ரூபாயும் சேர்த்து மொத்தம் 33 ஆயிரத்து 800 ரூபாய் புதிய வருமான வரியின் கீழ் வரி செலுத்துவோர் செலுத்த வேண்டி இருக்கும்.
இதற்கு முந்தைய புதிய வருமான வரியின் அமைப்பின் கீழ், ஆண்டுக்கு 9 லட்சம் வரை ஊதியம் பெறுவோர், நிலையான கழிவு தொகை 50 ஆயிரம் ரூபாய் கழிந்து 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டி இருக்கும். அதன்படி அவர் 3 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டியதில்லை.
3 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை 5% வரியின் அடிப்படையில், கூடுதல் 3 லட்ச ரூபாய்க்கு 15 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டி இருந்தது. அதேபோல் 6 லட்ச ரூபாய் முதல் 9 லட்ச ரூபாய் வரை 10 சதவீத வரியின் அடிப்படையில் கூடுதலாக 3 லட்ச ரூபாய்க்கு 25 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும்.
இதனுடன் பொது வரி 40 ஆயிரம் ரூபாய் மற்றும் செஸ் வரி 4 சதவீதத்தில் ஆயிரத்து 600 ரூபாயும் சேர்த்து மொத்தம் 41 ஆயிரத்து 600 ரூபாய் செலுத்த வேண்டி இருந்தது. ஒட்டுமொத்தமாக புதிய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்த நபர் ஆண்டுக்கு 9 லட்ச ரூபாய் ஊதியம் பெறுபவராக இருக்கும் பட்சத்தில், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ள புதிய அறிவிப்பின் மூலம் கூடுதலாக 7 ஆயிரத்து 800 வரை சேமிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்" - ராகுல் காந்தி சாடல்! - Budget 2024