தமிழ்நாடு

tamil nadu

நீட் முறைகேடு; முதல் கூட்டத்தை நடத்திய உயர்மட்ட நிபுணர்கள் குழு! - neet exam issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 7:53 PM IST

High Level NEET Committee: நீட் தேர்வு வெளிப்படையாக, நம்பிக்கையாக நடத்துவதை உறுதி செய்வது குறித்து ஆலோசித்து பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட உயர்மட்ட நிபுணர்கள் கொண்ட குழு தனது முதல் கூட்டத்தை நடத்தியுள்ளது.

டெல்லி மாணவர்கள் போராட்டம்
டெல்லி மாணவர்கள் போராட்டம் (credit - Etv Bharat Tamil Nadu)

டெல்லி: இந்தியாவில் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் மருத்துவப் படிப்புக்கான இளநிலை நீட் தேர்வு இந்தாண்டு கடந்த மே 5ஆம் தேதி வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் உட்பட மொத்தம் 571 நகரங்களில் 4,750 மையங்களில் நடந்தது. சுமார் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர்.

இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு வினாத்தாள் கசிவு, முடிவுகளில் குளறுபடி, மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதில் முறைகேடுகள் போன்ற புகார்கள் எழுந்து பெரும் சர்ச்சையைக் கிளம்பியது. மேலும், நடைபெற‌ இருந்த முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வினை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு நாடு முழுக்க கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இதற்கிடையே, நீட் தேர்வு முறைகேடு குறித்து மத்திய உயர்கல்வித்துறை இயக்குனர் கொடுத்த எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில், சிபிஐ கிரிமினல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், வருங்காலங்களில் நீட் தேர்வு வெளிப்படையாக, நம்பிக்கையாக நடத்துவதை உறுதி செய்வது குறித்து ஆலோசிக்க மத்திய கல்வி அமைச்சகத்தால் உயர்மட்ட நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இதில், முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர்கள் உள்ளனர். இந்தக் குழு முதற்கட்டமாக திங்கட்கிழமை அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளது.

அது தொடர்பான வீடியோவை கல்வி அமைச்சகம் வெளியிட்டிருந்தது. அதில், ''நீட் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த குழு முன்னுரிமை அடிப்படையில் பெற்றோர் மற்றும் மாணவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று பரிந்துரைகளை இரண்டு மாதங்களுக்குள் கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும்'' என கூறப்பட்டுள்ளது.

மேலும், மத்திய கல்வி அமைச்சகத்தின் முந்தைய அறிவிப்பின்படி, இந்தக் குழு தேர்வு முறையின் கட்டமைப்பு, செயல்பாடு, செயல்முறை, வெளிப்படைத்தன்மை மற்றும் தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேலும் மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தவறுகள் நேராத தேர்வு முறையாக நீட் வலுப்படுத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பலரை கைது செய்துள்ளதாகவும், சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு நீட் முறைகேடு குறித்து வழக்குகள் பதியப்பட்டுள்ள இடங்களில் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி பதவியேற்பு! அரசியலமைப்பு புத்தகத்துடன் பதவியேற்பு!

ABOUT THE AUTHOR

...view details