ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தின் 13வது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று (ஜூலை.4) மாலை பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சராக ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக நேற்று (ஜூன்.4) மாலை சம்பை சோரன் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். சம்பை சோரனின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்ட நிலையில், இன்று முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார்.
முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்த போது ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31ஆம் தேதி கைது செய்தது.
இதற்கு முன்னதாக ஹேமந்த் சோரன் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது கட்சியின் மூத்த தலைவா் சம்பை சோரன் ஜாா்க்கண்ட் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். சில மாதங்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியது.
அதைத் தொடர்ந்து வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக சம்பை சோரன் இல்லத்தில் நடைபெற்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜார்கண்ட் சட்டப் பேரவை தலைவராக ஹேமந்த் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள், மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் தாகூர், ஆர்ஜேடி அமைச்சர் சத்யானந்த் போக்தா, எம்எல்ஏ வினோத் சிங், ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:"16 மணி நேரம் காத்திருந்தோம்.. இந்திய வீரர்களை அழைத்து வருவோம் என கனவிலும் நினைக்கவில்லை" ஏர் இந்தியா விமான குழு நெகிழ்ச்சி! - Air India crew with indian Players