பெங்களூரூ: கர்நாடக மாநிலம் ஹசன் மக்களவை தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோ விவகாரத்தில் ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ எச்.டி ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 4ஆம் தேதி எச்.டி ரேவண்ணா ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யபப்ட்ட நிலையில், ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில், இந்த மனு எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (மே.13) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி, ஆள் கடத்தல் வழக்கில் எச்.டி ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். எச்.டி ரேவண்ணாவுக்கு எதிரான பெங்களூரு கே.ஆர் நகர் காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடையதாக ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஆபாச வீடியோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரணைக்கு ஆஜராகாமல் தடுக்க கடத்தியதாக பதியப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி ஹோலேநரசிபூர் எம்.எல்.ஏ, எச்.டி ரேவண்ணா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.