ஹசன்: 18வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றன. இந்நிலையில், மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன்.4) எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 28 மக்களவை தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் பெலகாம், தார்வத், உத்தர கன்னடா, ஷிவமோகா, பெங்களூரு கிராமப்புறம், மைசூரு, பென்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு உள்ளிட்ட 16 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கின்றன.
அதேநேரம் சிக்கோடு, ராய்ச்சூர், பெல்லாரி உள்ளிட்ட 10 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில், ஹசன் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட ஆபாச வீடியோ விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்ந்து பின்னடைவை எதிர்கொண்டு உள்ளார்.
1 மணி நிலவரப்படி பிரஜ்வல் ரேவண்ணா 5 லட்சத்து 52 ஆயிரத்து 324 வாக்குகள் பெற்று உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஸ் படேல் 30 ஆயிரத்து 526 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ஆபாச வீடியோ விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி வெளிநாடு தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணா, கடந்த மே 31ஆம் தேதி நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டார்.
சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் ஜூன் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் அவர் மீண்டும் போட்டியிட்ட ஹசன் தொகுதியில் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு இதே ஹசன் தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா 6 லட்சத்து 76 ஆயிரத்து 606 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மஞ்சுவை விட 1 லட்சத்து 41 ஆயிரத்து 324 வாக்குகள் வித்தியாசத்தில் பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:LIVE: பாஜக தொடர் முன்னிலை! பங்குச்சந்தை கடும் சரிவு! - Lok Sabha Election Results 2024