மும்பை:மகாராஷ்டிர மாநிலம் மும்பை அடுத்த கட்கோபர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீசிய கடுமையான புழுதிப் புயலால் ராட்சத விளம்பர பேனர் விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ நேரத்தில் அப்பகுதியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த ராட்சத விளம்பர பலகையில் சிக்கிக் கொண்டனர்.
தொடர் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 14 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், விளம்பர பலகை விழுந்த விபத்தில் மேலும் இரண்டு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. விளம்பர பலகை விழுந்ததில் சிக்கிக் கொண்ட காரில் இருந்து 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மருத்துமனையில் 40க்கு மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 30 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மீதமுள்ளவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.