தென்காசி: சென்னைக்கு விமானத்தில் கல்வி சுற்றுலா சென்று வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பட்டாசு வெடித்து கிராமத்து மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கொண்டலூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 95-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இப் பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ், ஆசிரியர்கள், 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 20 பேர் தன்னார்வலர்கள், நண்பர்கள் உதவியுடன் கல்வி சுற்றுலாவாக சென்னைக்கு முதன் முறையாக விமானம் மூலம் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 18 ஆம் தேதி சனிக்கிழமையன்று மதுரை விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கல்வி சுற்றுலா சென்றனர். சென்னையில் அவர்கள் பிர்லா கோளரங்கம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், எழும்பூர் அருங்காட்சியகம், சட்டமன்றம், தலைமை செயலகம், சென்னை உயர் நீதிமன்றம், வள்ளுவர் கோட்டம், தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் ஆகியவற்றை சுற்றிப்பார்த்தனர்.
இதையும் படிங்க: 60 நாட்களுக்கு பிறகு நேற்று தான் நிம்மதியாக உறங்கினோம் - டங்ஸ்டன் எதிர்ப்பு மக்கள் உருக்கம்!
இதனைத் தொடர்ந்து வண்டலூர் உயரியியல் பூங்காவுக்கும் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் திரும்பினர். பின்னர் அவர்கள் பேருந்து மூலம் ஊருக்குத் திரும்பினர்.
சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு கொண்டலூர் ஊர் பொதுமக்கள் சார்பில் ஊர் எல்லையிலிருது பள்ளி வரை மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊர் பெரியவர்கள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு மாலை மற்றும் சால்வைகள் அணிவித்தனர். மேலும் பெண்கள் வழி நெடுக ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். இளைஞர்கள் விசிலடித்து உற்சாக மிகுதியில் ஆட்டம் போட்டனர்.பள்ளி அருகே மைக் செட் அமைத்து டிஜிட்டல் பேனர்கள் வைத்து தங்களுடைய நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.