டெல்லி:குடியரசு தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும். இதில் தலைமை விருந்தினராக பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம்.
முன்னதாக, இந்தாண்டு ஜனவரி 26ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஜோ பைடன் ஜனவரியில் இந்தியா வர முடியாத சுழல் உள்ளதாக மறுத்துவிட்டார். இதையடுத்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அழைப்பை ஏற்றுக் கொண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ளதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அதிபர் மேக்ரான் ஜனவரி 26ஆம் தேதி டெல்லிக்கு செல்வதற்கு முன், ஜனவரி 25ஆம் தேதி அவருக்கு ஜெய்ப்பூரில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, ஜெப்பூரில் பிரம்மாண்ட சாலை அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்தாண்டு ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பேஸ்டில் தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு நடைபெற்ற அணிவகுப்பில் இந்திய பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்றனர். அதன் பின், கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வந்திருந்தார்.
அப்போது இந்தியா- பிரான்ஸ் இடையேயான பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு தொடர்ந்து வருகிறது. இதற்கு உதாரணமாக இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் ராணுவ தளவாடங்கள் விற்பனை மற்றும் 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது ஒரு குறிப்பிடத்தக்க ஒப்பந்தமாகும்.
மேலும், இந்தாண்டு மேக்ரான் இந்தியா வர இருப்பதால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் பலப்படும் என கூறப்படுகிறது. டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் பிரான்ஸ் தலைவர்கள் கலந்து கொள்வது 6வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் வருகையையொட்டி இந்தியா - பிரான்ஸ் இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:5வது நாடாக நிலவில் கால் பதித்த ஜப்பான் - இருந்தாலும் அதில் சிக்கல் இருக்கு?