புதுடெல்லி:மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி சடங்கில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இல்லத்தில் அஞ்சலி:முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று (டிச.26) முன்தினம் இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, அன்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று, மறைந்த மன்மோகன் சிங் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் அலுவலகத்தில் அஞ்சலி:இந்த நிலையில் இன்று காலை டெல்லி மோதிலால் நேரு சாலையில் உள்ள மன்மோகன் சிங் இல்லத்தில் இருந்து அவரது உடல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் ஒரு மணி நேரம் வைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மனைவி குருசரண் கவுர், அவர்களின் மகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இறுதி யாத்திரை:இதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் தகனம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. மன்மோகன் உடல் வைக்கப்பட்ட வாகனத்தை தொடர்ந்து தலைவர்கள் சென்றனர். ஏராளமான தொண்டர்களும் ஊர்வலத்தில் சென்றனர். அப்போது அவர்கள் மன்மோகன் சிங் புகழ் வாழ்க என்று இந்தியில் கோஷமிட்டனர். சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை மன்மோகன் சிங் பெயர் நிலைத்திருக்கும் என்றும் தொண்டர்கள் முழக்கம் இட்டனர். பின்னர் இறுதி சடங்குகள் நடைபெற உள்ள நிகம்போத் காட் பகுதிக்கு மன்மோகன் சிங் உடல் எடுத்து செல்லப்பட்டது.
தலைவர்கள் இறுதி மரியாதை:குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, மாநிலங்களவை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் முறையே மல்லிகார்ஜூன கார்க்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் இறுதி மரியாதை செலுத்தினர். இதர மத்திய அமைச்சர்கள், பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் மொரீஷியஸ் வெளியுறவு அமைச்சர் தனஞ்சய் ராம்ஃபுல் ஆகியோரும் இறுதி மரியாதை செய்தனர்.
முழு அரசு மரியாதை: இதனைத் தொடர்ந்து ராணுவ தளபதி ஜெனரல் அனில் சவுகான், முப்படைகளின் தலைவர்கள் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து தகனமேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் மூவர்ணக்கொடி போர்த்தி முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலை சுற்றி சந்தனக்கட்டைகள் வைக்கப்பட்டன. சீக்கியமுறைப்படி இறுதி சடங்குகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது. கட்சி வேறுபாடுகளை கடந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய தலைவர்கள், தொண்டர்கள் மன்மோகன் சிங் நினைவுகளுடன் திரும்பினர்.