பெலகாவி, கர்நாடகா: கோவா மாநிலத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான லாவோ எஸ் மம்லெடர் (69), கர்நாடக மாநிலத்தின் பெலகாவி மாவட்டத்தில் ஒரு விடுதியில் தங்கியுள்ளார். வெளியே சென்றுவிட்டு திரும்பிய அவரது கார், ஆட்டோ மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் இவரை தாக்குவதும், பின்னர் அங்கிருந்து விடுதி அறைக்கு செல்லும் வழியில் நிலைதடுமாறி விழுந்து இறப்பதும் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் பெலகாவி மாவட்டத்தின் காதேபசார் பகுதியில் அமைந்திருக்கும் சீனிவாஸ் தங்கும் விடுதியில் நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லாவோ, 2012 - 2017 காலகட்டத்தில் கோவாவின் போண்டா தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக நிகழ்விடத்தில் விசாரணை நடத்திய மார்க்கெட் காவல்துறையினர், விசாரணை நடத்தி ஆட்டோ ஓட்டுநரை உடனடியாக கைது செய்தனர். நிலைதடுமாறி விழுந்த லாவோவை மீட்டு அருகில் இருந்து பெலகாவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு இதயத்துடிப்பு போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் பீம் சங்கர், காவல் ஆணையர் ரோகன் ஜெகதீஷ் ஆகியோர் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அதில், கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து நடந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.