அஜ்மீர்: ராஜஸ்தானின் அஜ்மீர் நகரில் வைசாலி நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் அகில இந்திய மூன்றாம் பாலினத்தவர் கருத்தரங்குக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்கள் குவிந்து வருகின்றனர்.
மூன்றாம் பாலினத்தவர்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்கான 10 நாள் கருத்தரங்கு நேற்றுத் தொடங்கியது. மூன்றாம் பாலினத்தவர்களுக்காக பாடுபட்ட அனிதா பாய் நினைவாக இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது. மேலும் மூன்றாம் பாலினத்தவர் சமூகத்தில் குரு-சிஷ்ய மரபானது தொடரந்து பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாகுசாரா கடவுளைக் கொண்ட கோயிலில் மூன்றாம் பாலினத்தவர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இது மூன்றாம் பாலினத்தவர்களின் குல தெய்வம் என்று கருதப்படுகிறது. மூன்றாம் பாலினத்தவர் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு மருந்தகங்கள், வங்கி சேவை, பயண முகவர்கள் உள்ளிட்ட ஸ்டால்கள் கருத்தரங்கு நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் பாலினத்தவர்கள் சடங்குகளை மேற்கொள்வதற்காக பெரிய பந்தல் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமையன்று நடைபெற்ற நிகழ்வின் போது கிச்சடி தயாரிக்கப்பட்டு குலதெய்வத்துக்குப் படைக்கப்பட்டது. பின்னர் இதனை பிரசாதமாக மூன்றாம் பாலினத்தவர்கள் உண்டனர்.
இந்த கருத்தரங்கு குறித்து பேசிய மூன்றாம் பாலினத்தவரான நீட்டா பாய், "கருத்தரங்கு முழுவதும் உற்சாகமும், மகிழ்ச்சியும் நிரம்பியுள்ளது. இங்கு வருபவர்களுக்கு ராஜஸ்தான் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது,"என்றார்.
மேலும் மூன்றாம் பாலினத்தவரான சப்னா பாய், "மூன்றாம் பாலினத்தவர்களுக்கான மகா கும்பமேளா இதுவாகும். மூன்றாம் பாலினத்தவர்கள் மத வேறுபாடுகள் மீது நம்பிக்கை கொள்வதில்லை. நம்நாட்டில் அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்,"என்றார்.