பீகார்:முன்னாள் பீகார் துணை முதலமைச்சர் மற்றும் பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி காலமானார். அவருக்கு வயது 72. புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிசை பலனின்றி திடீரென உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பீகார் பாஜக தனது எக்ஸ் பக்கத்தில், "பீகார் முன்னாள் துணை முதலமைச்சரும், முன்னாள் மாநிலங்களவை எம்பியுமான சுஷில் குமார் மோடியின் மறைவுச் செய்தியால் பாஜக குடும்பம் மிகவும் சோகத்தில் உள்ளது. ஒரு சிறந்த வீரரை இழந்துவிட்டோம். இந்த இழப்பை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது" என்று பதிவிட்டுள்ளது.
கடந்த 1952ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி சுஷில் குமார் மோடி பிறந்தார், மேலும் பீகார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பீகார் நிதி அமைச்சர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 7 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (மே.13) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சுஷில் குமார் மோடியின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:மும்பை ராட்சத இரும்பு பில் போர்டு விழுந்ததில் 4 பேர் பலி! 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்! வீடியோ வைரல்! - Mumbai Bill Board Collapse