சென்னை: கோவையில் வனப்பகுதியில் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளப்படுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கோவை மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி கோவை மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, மாவட்ட நீதிபதியின் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறிப்பிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தால் மட்டுமே முழுமையான விவரம் தெரிய வரும் என்றும் மாவட்ட நீதிபதியின் அறிக்கையில் 40% மட்டுமே வெளி வந்திருக்கிறது என்றும், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புருஷோத்தமன் குறிப்பிட்டார். அப்போது நீதிபதிகள், மாவட்ட நீதிபதி அளித்த அறிக்கையில், 10 மீட்டர் ஆழத்துக்கு பெருமளவில் மண் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை எப்படி ஈடுகட்ட போகிறீர்கள்? சட்டவிரோதமாக மண் எடுப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பெரும் மலைகளை காணாமல் போயிருக்கின்றன. கனிமவளத்துறை உதவி இயக்குநர் என்ன நடவடிக்கை எடுத்தார்? என அரசு தரப்புக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மேலும், மாவட்ட நீதிபதியின் அறிக்கை மனசாட்சியை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது எனக் கூறிய நீதிபதிகள், சட்ட விரோதமாக எடுக்கப்படும் மண்ணை கொண்டு செல்வதற்காக நீரோடையின் மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட நீதிபதி அறிக்கையில் கூறியுள்ளதை சுட்டிக்காட்டினர்.
சட்டவிரோதமாக மண் எடுத்தது யார் என தெரியவில்லை என காவல்துறையினர் கூறுவதை நம்ப வேண்டுமா? சட்ட விரோதமாக மண் எடுப்பவர்களை இரண்டு நாட்களில் கண்டுபிடிக்க முடியாதா? எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: TNPSC தேர்வில் போலிச் சான்றிதழ் கொடுத்து முறைகேடு செய்த வழக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கெடு!
பின்னர் அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை டிசம்பர் 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், வனப் பகுதியில் சட்டவிரோதமாக மண் எடுப்பது குறித்து வனத்துறையினர் தெரிவித்தும் கனிமவளத்துறை உதவி இயக்குநர், சம்பந்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டினர்.
பின்னர் சட்டவிரோதமாக மண் எடுப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? வனப்பகுதியில் எவ்வளவு பரப்புக்குச் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது? சட்டவிரோதமாக மண் எடுக்க உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
என்பன குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். முழுமையாக அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் வழக்கை வேறு அமைப்பு விசாரணைக்கு மாற்ற நேரிடும் எனவும் எச்சரித்தனர்.
மேலும் வழக்கின் அடுத்த விசாரணையின் போது கனிமவளத்துறை ஆணையர், கோவை மாவட்ட ஊரக காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அதிகாரி ஆகியோர் நேரில் ஆஜராகி இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல மாவட்ட நீதிபதியின் அறிக்கையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்த பரிந்துரைகளுடன் அறிக்கைகளை தாக்கல் செய்ய மனுதாரர்கள் தரப்புக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்