மும்பை: மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களில் வென்றது. மகா விகாஸ் அகாதி 46 இடங்களை மட்டுமே வென்று மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
மகாயுதி கூட்டணியில் பாஜக 132, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57, என்சிபி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மகா விகாஸ் அகாதியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 20, காங்கிரஸ் 16, சரத்சந்திர பவார் தலைமையிலான என்சிபி 10 இடங்களிலும் வென்றுள்ளன.
இந்த நிலையில், மகாராஷ்டிர சட்டமன்றதேர்தலில் தோல்வியை சந்தித்த மகா விகாஸ் அகாதி வேட்பாளர்கள் தங்களது தோல்விக்கு இவிஎம் எந்திரத்தில் நடந்த குளறுபடிதான் காரணம் என்று புகார் தெரிவித்துள்ளனர். மேலும் நேற்று நடந்த கூட்டத்தில், தோல்வி அடைந்த வேட்பாளர்கள் உத்தவ் தாக்கரேவை சந்தித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) செயல்பாட்டை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா: 'வாய்ப்பே இல்லை'.. யார் சிஎம் விவகாரத்தில் பாஜக திட்டவட்டம்..!
மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கட்சியின் மந்தமான செயல்பாடுகளை குறித்து விவாதித்துள்ளார். அப்போது, மும்பை சண்டிவாலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஆரிப் நசீம் கானும் இருந்துள்ளார்.
அதன் பிறகு செய்தியாளரிடம் பேசிய ஆரிப் நசீம் கான், ''தேர்தல் முடிவுகளில் சந்தேகங்களை வெளிப்படுத்தும் வகையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எங்களுக்கு புகார்கள் வருகின்றன. ஜனநாயகத்தில் புகார்கள் சரிபார்க்கப்பட வேண்டும். நான் உட்பட பலர் வாக்கு சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளரை விட இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் இருக்கும் வேட்பாளர்கள் இதற்கான எழுத்துப்பூர்வ கோரிக்கையை வைக்க வேண்டும். முடிவு அறிவிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் அத்தகைய கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்றும் விண்ணப்பம் கோரும் வேட்பாளர் ரூ 41,000 செலுத்த வேண்டும், இயந்திரத்தில் முறைகேடு கண்டறியப்பட்டால் அந்த தொகை திருப்பி அளிக்கப்படும்'' என கூறினார்.
மேலும், மும்பையைச் சேர்ந்த சிவசேனா (UBT) எம்எல்ஏ ஒருவர், ''இவிஎம்-களில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து வேட்பாளர்களும் EVMகள் மீது சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்'' என அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்