தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கட்டுப்பாடு விதித்த மேற்கு வங்கம்; உருளைக்கிழங்கு வரத்து இல்லாமல் தவிக்கும் ஒடிசா..! - POTATO PRICE SURGE IN ODISHA

காய்கறிகள் வழங்குவதற்கு மேற்கு வங்க அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் ஒடிசாவில் கடுமையான உருளைக்கிழங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

By PTI

Published : Nov 29, 2024, 4:33 PM IST

புவனேஸ்வர்: ஒடிசாவிற்கு காய்கறிகள் வழங்குவதற்கு மேற்கு வங்க அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தங்கள் மாநிலத்தில் அத்தியாவசிய சமையல் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, மற்ற மாநிலங்களுக்கு உருளைக் கிழங்கு ஏற்றுமதியை கட்டுப்படுத்த மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஒடிசாவில் உருளைக் கிழங்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கிலோ அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வியாபரிகளும், பொதுமக்களும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

மேலும், காய்கறிகள் லோடு ஏற்றியுள்ள வாகனங்கள் கடந்த புதன் கிழமை இரவு முதல் எல்லையை கடக்க அனுமதிக்கப்படாததால், நூற்றுக்கணக்கான உருளைக் கிழங்கு ஏற்றி சென்ற லாரிகள் ஒடிசா - மேற்கு வங்க எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உருளைக் கிழங்கு சேதமடையக்கூடும் என்பதால் இவற்றில் பல வாகனங்கள் அவற்றின் சொந்த ஊர்களுக்கே திரும்பியுள்ளன.

ஒடிசாவிற்கு ஆண்டு தோறும் சுமார் 14 லட்சம் டன் உருளைக்கிழங்கு தேவைப்படுகிறது. ஒருநாள் தேவைக்கு சுமார் 4,500 டன் உருளைக்கிழங்கு தேவைப்படுகிறது. இதில் பெரும்பாலும் மேற்கு வங்கத்தில் இருந்தே உருளைக்கிழங்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:மகாயுதி-க்குள் மீண்டும் இழுபறி... உள்துறை, நிதி துறைக்கு எகிறிய டிமாண்ட்..! ஓரிரு நாளில் முதல்வர் பெயர் அறிவிப்பு!

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஒடிசா மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.33 வரை விற்கப்பட்ட உருளைக்கிழங்கு தற்போது சில்லறை சந்தையில் கிலோ ரூ.40 ஆக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மீண்டும் வரத்து சீராகவில்லை என்றால், உருளைக்கிழங்கு விலை அதை விட உயர வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர்.

உருளைக்கிழங்கு தட்டுப்பாடு குறித்து ஒடிசா வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் சுதாகர் பாண்டா தெரிவிக்கையில், ''உருளைக்கிழங்கு லாரிகளை மாநிலத்திற்குள் அனுமதிக்க ஒடிசா அரசு தலையிட்டு மேற்கு வங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஒடிசா உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா, ​​'' மேற்கு வங்கத்தில் இருந்து உருளைக்கிழங்கு சப்ளை செய்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் பஞ்சாப் அல்லது உத்தரபிரதேசத்தில் இருந்து உருளைக்கிழங்கை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். நுகர்வோர் எந்த பிரச்சனையும் சந்திக்காமல் பார்த்துக்கொள்வோம்" என்று அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details