மும்பை:மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியின் மும்பாதேவி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஷைனா என்.சி மீது அவதூறு பரப்பும் விதமாக 'இம்போர்ட்டட் மால்' (imported maal) எனப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிவசேனா (UBT) கட்சி எம்.பி அரவிந்த் சாவந்த் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரவிந்த் சாவந்த் தனது வார்த்தைகளை ஷைனா தவறாகப் புரிந்து கொண்டுள்ளார் எனவும் விளக்கமளித்துள்ளார்.
பாஜகவில் இருந்த ஷைனா என்.சி, சமீபத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் ஐக்கியமானார். இந்த நிலையில், 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், மும்பையில் உள்ள மும்பாதேவி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அமீன் படேலை எதிர்த்து, சிவசேனாவின் வேட்பாளர் ஷைனா என்.சி போட்டியிடுகிறார். தற்போது இந்த தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவி வருகிறது. மேலும், தேர்தல் பிரச்சாரம் துவங்கியுள்ள நிலையில், தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று (நவ.1) மும்பாதேவி தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து உத்தவ் சிவசேனா கட்சி எம்.பி அரவிந்த் சாவந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி அரவிந்த் சாவந்த், "இந்த தொகுதியில் போட்டியிடும் ஷைனா என்.சி பாஜகவில் இருந்த போது, சீட்டு கிடைக்கவில்லை என்ற காரணத்தால், தற்போது அங்கிருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் ஐக்கியமாகியுள்ளார்.
ஆனால், இதுபோன்று 'இம்போர்ட்டட் மால்' ஏக்நாத் ஷிண்டேவின் கட்சியில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தற்போது வேட்பாளராகவும் மாறிவிட்டார் என ஆபாசமாகத் தாக்கி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பின்னர், இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக வேட்பாளர் ஷைனா என்.சி நாக்பாடா காவல் நிலையத்தில், தன்னை எம்.பி அரவிந்த் சாவாந்த் 'இம்போர்ட்டட் மால்' எனக் குறிப்பிட்டு, அவமதித்துள்ளதாகப் புகார் அளித்துள்ளார்.