சிந்துதுர்க்: மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க்கில் கடந்தாண்டு டிசம்பர் 4ஆம் தேதி, கடற்படை தினத்தன்று 35 அடியில் மராட்டியப் போர் மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையானது பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று அடித்த பலத்த காற்றினால் அந்த சிலை இடிந்து விழுந்தது.
சிந்துதுர்க் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த சிலை காற்றினால் இடிந்து விழுந்த சம்பவம் அம்மாநில அரசியல் அரங்கில் தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது. இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை இடிந்து விழுந்தது துரதிர்ஷ்டவசமானது என்றும், பொதுப்பணித்துறையினர் மற்றும் கடற்படை அதிகாரிகள் இன்று அந்த இடத்திற்குச் சென்று அதற்கான காரணத்தை ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், பலத்த காற்றினால் சிலை விழுந்து சேதமடைந்தது என்று கூறிய ஷிண்டே, மாநில அரசு இந்த சம்பவத்தின் காரணத்தை கண்டுபிடித்து, அதே இடத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலையை மீண்டும் நிறுவும் என்றும் கூறினார்.
இடிந்து விழுந்த சிலை கடற்படையினரால் வடிவமைக்கப்பட்டு அமைக்கப்பட்டதாகும். ஆனால், சம்பவத்தன்று மணிக்கு 45 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் தாக்கு பிடிக்க முடியாமல் சிலை சேதமடைந்துள்ளது. இதுகுறித்து இந்திய கடற்படை, சிலை சேதமடைந்த காரணத்தை உடனடியாக விசாரிக்கவும், சிலையை சீர்செய்து விரைவில் மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்க, மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிபுணர்களுடன் கடற்படை ஒரு குழுவை நியமித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.