புதுடெல்லி: சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் தலைவரும், காலிஸ்தான் ஆதரவாளருமான குர்பத்வந்த் சிங் பண்ணுன் என்பவரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விவகாஸ் யாதவை டெல்லி போலீசார், எஃபிஐ ஆகிய இரு புலனாய்வு அமைப்புகளும் தேடிக்கொண்டிருக்கின்றன.
குர்பத்வந்த் சிங் பண்ணுனை கொல்வதற்கான சதித்திட்டம் இந்தியாவில் உருவானதாக கூறப்படுகிறது. குர்பத்வந்த் சிங் பண்ணுன் இப்போது கனடா, அமெரிக்கா என இரட்டை குடியுரிமையில் வெளிநாட்டில் வசித்து வருவதால் அவருக்கு எதிரான சதித்திட்டம் என்பது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்படும் விகாஸ் யாதவ், இந்தியாவில் உள்ள வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்றும் அவர் அமெரிக்காவின் எஃபிஐ புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்படுவாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது? இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் ருத்ரா விக்ரம் சிங்கிடம் ஈடிவி பாரத் சில கேள்விகளை முன் வைத்தது. அதற்கு அவர் அளித்த பதில்களை இப்போது பார்க்கலாம்.
இந்தியாவின் சட்ட நடவடிக்கைகள் : "டெல்லியில் கொள்ளை மற்றும் கடத்தல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட விகாஸ் யாதவ் கடந்த ஏப்ரல் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அப்போதிருந்து அவர் தலைமறைவு ஆகிவிட்டார், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஏதேனும் ஒரு வழக்கில் இந்திய போலீசாரால் விகாஸ் யாதவ் மீண்டும் கைது செய்யப்பட்டால், முதலில் தமக்கு எதிராக உள் நாட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டும்.
ஒப்படைக்கக்கோரும் கோரிக்கை :விகாஸ் யாதவை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கோரிக்கை விடுத்தால், அப்போது சட்ட சிக்கல் எழும். தற்போதுள்ள இந்தியா-அமெரிக்கா இடையே செயல்படுத்தப்படும் ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் கீழ்தான் எந்த ஒரு ஒப்படைப்பு கோரிக்கையும் நிறைவேற்றப்படும். ஆனால், இந்த செயல்பாடு என்பது எளிதானதாகவோ அல்லது தானாக நடந்து விடக்கூடிய ஒன்றோ அல்ல. இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் கீழ், விகாஸ் யாதவுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும், தொடர்புடைய ஆவணங்களையும் அமெரிக்கா இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் திருப்தியுற்றால் மட்டுமே ஒப்படைப்பு ஒப்பந்தத்தத்தின் கீழ் அவரை ஒப்படைப்பது குறித்து இந்தியா சார்பில் நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக, விகாஸுக்கு எதிரான கொலை சதித்திட்டம் தீட்டினார் என்பது போன்ற தீவிரமான குற்ற வழக்குகளில் கட்டாயம் அதற்கான ஆதாரங்களின் அடிப்படையில்தான் ஒப்படைத்தல் என்பது மேற்கொள்ளப்படும். ஒருவரை ஒப்படைப்பது என்று நடைமுறைக்கு வரும்போது அதற்கு வலுவான ஆதாரம் தேவை. எனவே, அமெரிக்க அரசு, இந்திய அரசிடம் அதற்கான வலுவான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும்.
இன்டர்போல் பங்கு :ஒப்படைக்க கோருவது என்பது முதன்மையான ஒரு வழியாகும். அதே நேரத்தில் இன்டர்போல் உதவியை நாடுவது அமெரிக்காவின் இன்னொரு வழியாக இருக்கும். சர்வதேச விமான நிலையங்கள் வழியே யாதவ் தப்பிச் செல்வதைத் தடுக்க எச்சரிக்கை விடுக்கும்படி இன்டர்போல் அமைப்பை எஃபிஐ நாடும். குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் தீவிரத்தன்மையை இன்டர்போல் உணர்ந்து கொண்டால், ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்கப்படும். இதன் பேரில் எந்த ஒரு நாட்டுக்கு யாதவ் பயணம் மேற்கொண்டாலும் அவர் கைது செய்யப்படலாம்.
இதையும் படிங்க :காலிஸ்தான் ஆதரவாளர் பனுன் கொலை முயற்சி விவகாரம்: அமெரிக்கா ஆதாரம் வெளியிடாதது ஏன்? -ரஷ்யா!