இந்தூர் (மத்திய பிரதேசம்):இந்திய கடற்படையில் பணியாற்றிய 8 முன்னாள் ராணுவ வீரர்களை, கத்தார் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி, அந்நாட்டு பாதுகாப்புப் படை கடந்த 2022 ஆகஸ்ட் 8ஆம் தேதி கைது செய்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை வீரர்கள் தரப்பில் இருந்து பல முறை ஜாமீன் வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.
ஆனால், ஜாமீன் மனுவை தொடர்ந்து நிராகரித்து வந்த கத்தார் அரசு, அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து, அவர்களை எப்படியாவது தாயகம் மீட்டுத் தருமாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் வெளியுறவு அமைச்சகத்தில் தொடர் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையினை ஏற்ற வெளியுறவு அமைச்சகமும், அவர்களை விடுவிக்க சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வதாக உறுதியளித்திருந்தது.
அதன்பிறகு, வெளியுறவுத்துறை தரப்பில் கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கத்தார் நீதிமன்றம், கைது செய்யப்பட்டவர்களின் மரண தண்டனையை சிறை தண்டனையாகக் குறைத்தது. இதைத் தொடர்ந்து, அந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை முடிவடைந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட 8 முன்னாள் கடற்படை வீரர்களையும் விடுவித்து கடந்த பிப்ரவ்ரி 12ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் கடற்படை ராணுவ வீரர்கள் 8 பேரும் பத்திரமாக தாயகம் திரும்பியதாக அதிகாரப்பூர்வ தகவலை மத்திய அரசு வெளியிட்டது. தற்போது பத்திரமாக நாடு திரும்பியுள்ள கடற்படை வீரர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.