டெல்லி:2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், அவரது பதவிக்காலம் 2027 டிசம்பர் வரை உள்ளது. சட்ட அமைச்சக அறிவிப்பின்படி, அருண் கோயலின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார்.
1985 பஞ்சாப் கேடரின் ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். முன்னதாக, கடந்த பிப்ரவரியில் தேர்தல் ஆணையர் அனுப் பாண்டே ஓய்வு பெற்றார். இதன்படி, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்தியத் தேர்தல் ஆணையக் குழுவில், தற்போது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.