டெல்லி:ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக - மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சி கவிழ்ந்த பின் அங்கு இன்னும் சட்டப் பேரவை தேர்தல் நடத்தப்படவில்லை. கடைசியாக 2014ஆம் ஆண்டு அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதன்பின் 10 ஆண்டுகளாக அங்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவில்லை.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர், ஹரியானாவில் தேர்தல் நடத்துவது குறித்து கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி மத்திய உள்துறை செயலாளர் அஜெய் பல்லாவுடன் இந்திய தேர்தல் அணையம் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து இன்று (ஆக.16) மதியம் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடுகிறது.
இந்த ஆண்டு இறுதியுடன் மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப்பேரவையும் காலாவதியாக உள்ளதால் அது குறித்தும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முப்தி வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெற்றதை தொடர்ந்து பாஜக - மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது.
அதன் பின் ஜம்மு காஷ்மீரை மற்றும் லடாக் என யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இதனிடைய ஜம்மு காஷ்மீரில் மீண்டும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தக் கோரி கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து முடிவு எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.