டெல்லி:டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 5வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்துள்ள நிலையில், அவரது தனி உதவியாளர் பிபவ் குமார் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி என்.டி.குப்தா ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (பிப்.6) திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு விசாரணை தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை ஏற்கனவே நவ.2, டிச.21, ஜன.3 ஆகிய தேதிகளில் அனுப்பிய சம்மனுக்கு இதுவரை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில், பிபவ் குமார் மற்றும் முன்னாள் டெல்லி ஜல் போர்டு உறுப்பினர் ஷலப் குமார் ஆகியோருக்குச் சொந்தமான இடங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் பலத்த பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, தன்னை கைது செய்தாலும் டெல்லி அரசின் வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்படாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். "பள்ளிகளை கட்டியதால் மணீஷ் சிசோடியாவும், கிளினிக்குகளை கட்டியதால் சத்யேந்தர் ஜெயின் மொஹல்லாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்" என கெஜ்ரிவால் மேலும் கூறினார். மேலும், மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத்துறை ஆம் ஆத்மி தலைவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.