சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் 4 மக்களவை தொகுதிகளுடன் சேர்த்து 6 சட்டமன்றங்களுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்று (மே.7) முதல் மே 14ஆம் தேதி வரை இடைத் தேர்தல் நடைபெறும் 6 சட்டமன்றங்கள் மற்றும் 4 மக்களவை தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்குகின்றன.
மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகங்களில் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மே 14ஆம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே 15ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், மே 17 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். இதில் பொது விடுமுறை காரணமாக மே 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 மக்களவை தொகுதிகள் மற்றும் 6 சட்டமன்றங்களுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.