ஒட்டாவா: லிபரல் கட்சி சார்பாக பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக தெரிவித்துள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரா ஆர்யா, கனடாவை இறையாண்மை மிக்க குடியரசாக மாற்றுவேன் என்றும், ஓய்வு வயது அதிகரிப்பு, குடியுரிமை அடிப்படையிலான வரி விதிப்பு உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வர உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தகுதியே அடிப்படை: கனடாவின் ஒட்டாவா எம்பியாக இருக்கும் சந்திரா ஆர்யா, இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவர். கடந்த 2015ஆம் ஆண்டு நேபியன் பகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் தமது முடிவு குறித்து எக்ஸ் பதிவில் அறிக்கை வெளியிட்டுள்ள சந்திரா ஆர்யா, "மன்னராட்சிக்கு மாற்றாக கனடாவை இறையாண்மை மிக்க குடியரசாக மாற்றுவேன். கனடா அதன் எதிர்காலத்தை முழு கட்டுப்பாட்டுடன் தீர்மானிப்பதற்கு இது உரிய தருணமாகும். சிறிய, தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் படி இல்லாத (பன்முகத்தன்மை, சம உரிமை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை )திறன் வாய்ந்தவர்களைக் கொண்ட அமைச்சரவையை முன்னெடுப்பேன். கனடாவின் அடுத்த பிரதமர் பதவிக்கு நான் போடடியிடுகின்றேன். கனடாவின் எதிர்கால தலைமுறையினருக்கான பாதுகாப்பான வளர்ச்சியை கொண்ட அரசாக இருக்கும்.
கனடாவில் பல தலைமுறைகள் இதுவரை காணத வகையில் நாம் குறிப்பிடத்தக்க கட்டமைப்பு பிரச்னைகளை எதிர் கொண்டுள்ளோம். அவை தீர்க்கப்பட வேண்டும் எனில் கடினமான விருப்பங்களை தேர்வு செய்ய வேண்டி இருக்கிறது. கனடா நாட்டவர்களுக்கு எது நன்மையை அளிக்குமோ, நமது குழந்தைகள், நமது மூதாதையர்களின் நலனுக்காகவே எப்போதும் கடினமாக நான் உழைப்பேன். தேவையான துணிச்சலான முடிவுகளை நாம்எடுக்க வேண்டும். பெரிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு கனடா பயப்படவில்லை. தீர்மானங்கள் நமது பொருளாதாரத்தை மறு கட்டமைக்கும்,நம்பிக்கையை மீட்டெடுக்கும். அனைத்து கனடாவாசிகளுக்கும் சம வாய்ப்புகளை உருவாக்கும், நமது குழந்தைகள், மூதாதையர்களுக்கு பாதுகாப்பான வளர்ச்சியை கொடுப்போம்,"என்று கூறியுள்ளார்.
I am running to be the next Prime Minister of Canada to lead a small, more efficient government to rebuild our nation and secure prosperity for future generations.
— Chandra Arya (@AryaCanada) January 9, 2025
We are facing significant structural problems that haven’t been seen for generations and solving them will require… pic.twitter.com/GJjJ1Y2oI5
இந்துக்களுக்கு குரல் கொடுப்பவர்: கனடாவில் உள்ள இந்துக்களுக்கு எப்போதுமே ஆதரவு குரல் கொடுப்பவர் ஆர்யா. ஒட்டாவா-புதுடெல்லி இடையேயான உறவு, கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகள், உள்ளிட்ட விஷயங்களில் அவர், சக லிபரல் கட்சி உள்ளிட்ட எம்பிக்களுடன் கருத்து மோதலை எதிர்கொண்டு வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு பிரிவினைவாத சீக்கியர்களுடன் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள இந்து வழிபாடு கோவிலில் இந்திய தூதரக அதிகாரிகள் வந்திருந்தபோது அங்கு மோதல் நடைபெற்ற நிலையில் அது குறித்து கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், லிபரல் கட்சியின் சுக் தாலிவால் ஆகியோருடன் ஆர்யா கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் இந்தியா-கனடா இடையேயான உறவில் சிக்கல் எழுந்தது. கடந்த ஆண்டு இந்தியா சென்ற ஆர்யா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது கனடாவின் சர்வதேச உறவுகள் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஆர்யா இந்தியா சென்றது அவரது சொந்த முயற்சியின் அடிப்படையிலான பயணமாகும்.அவர் கனடா அரசின் பிரதிநிதியாக செல்லவில்லை,"என்று கூறப்பட்டிருந்தது. இப்போது வரை ஆர்யா, முன்னாள் எம்பி ஃபிராங்க் பாய்லிஸ் ஆகியோர் மட்டுமே பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.மேலும் சிலரும் பிரதமர் பதவிக்கு போட்டியிடக் கூடும் என்று டொராண்டோ ஸ்டார் ஊடகம் தெரிவித்துள்ளது.