சென்னை: சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட மூன்று பேருந்து நிலையங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில், பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கனவே ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று ஜனவரி 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையில், சென்னையிலிருந்து வழக்கமாக தினமும் இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், நான்கு நாட்களுக்கு சேர்த்து 14,104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல், பிற ஊர்களிலிருந்து இந்த 4 நாட்களுக்கு 7,800 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு, பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக ஜனவரி 15ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையில், தினமும் இயக்கக்கூடிய 10,460 பேருந்துகளுடன் கூடுதலாக 5,290 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பல்வேறு ஊர்களுக்கு 6,926 என மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, பொங்கலுக்கு மொத்தம் 44,580 பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையின் நான்கு பேருந்து முனையங்களில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி,
1. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் - கிளாம்பாக்கம் மஃப்சல் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
2. கிளாம்பாக்கம் மாநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன
3. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை (இசிஆர்) சாலை வழியாக காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
4. மாதவரம் புதிய பேருந்து நிலையம்த்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இணைப்புப் பேருந்துகள்:
அதோடு சென்னை மாநகரின் பல்வேறு பகுதியிலிருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் செல்வதற்காக ஜனவரி 10 முதல் 13ஆம் தேதி வரை கூடுதலாக 320 இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
முன்பதிவு மையங்கள்:
பயணிகள் சிரமமின்றி முன் பதிவு செய்யும் வகையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 9 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். மேலும், டிஎன்எஸ்டிசி செயலி மூலமும் www.tnstc.in எனும் இணையதளம் மூலமாகவும் பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிக்கைக்கு கூடுதல் கட்டணமா? இந்த எண்ணில் புகார் கொடுக்கலாம்!
கார் வழித்தடம் மாற்றம்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்பவர்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதலாக காவலர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.
பயணிகளின் வசதிக்காக 24x7 கட்டுப்பாட்டு அறை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக, 94450 14436 என்ற 24 மணி நேர எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலித்தால் புகார்
மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா எண், 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். ஆம்னிப் பேருந்துகளை கண்காணிக்கவும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு தேவையான அளவில் பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இன்று செல்வதற்கு சுமார் 44 பேர் பதிவு செய்துள்ளனர். 11-ஆம் தேதி செல்வதற்கு 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும், 13ந் தேதி சுமார் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊருக்கு செல்ல பதிவு செய்துள்ளனர். போக்குவரத்துறையின் அதிகாரிகள் பேருந்துகளை கண்காணித்து அனுப்பும் பணியில் ஈடுப்பட உள்ளனர் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.