டெல்லி: மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், 'ரைசிங் சன்' (Rising Sun) எனும் பெயரில் இந்தியா முழுவதும் மேற்கொண்டு வரும் அதிரடி சோதனையில், வடமாநிலத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு தங்கங்களை கடத்திய கும்பல் ஒன்றை கைது செய்துள்ளது.
நான்கு மாநிலங்களில் மிகவும் நுண்ணியமாக திட்டமிட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவ கையில், கவுஹாத்தி, பார்பெட்டா, தர்பங்கா, கோரக்பூர் மற்றும் அராரியா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், மொத்தம் 61.08 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 19 வாகனங்கள், பணம் மற்றும் செல்போன் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த கடத்தல் குறித்து மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், கவுஹாத்தியில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, குடியிருப்பு பகுதிகளில் இருந்து 13 லட்சம் ரூபாய் மதிப்புடைய 22.74 கிலோ தங்கக் கட்டிகளும், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட இருவர் உள்பட கடத்தல் கும்பலைச் சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், கவுஹாத்தியில் இருந்து 13.28 கிலோ தங்கம் வாகனத்தில் கடத்தப்பட்டது குறித்து கிடைத்த தகவலை அடுத்து, அந்த வாகனத்தை கவுஹாத்தியில் இருந்து 90 கிமீ தூரத்தில் இருக்கும் பார்பெட்டா எனும் பகுதியில் மடக்கிப் பிடித்து, அதில் கடத்திச் செல்லப்பட்ட தங்கங்களையும், மேலும் இருவரையும் கைது செய்தனர்.