டெல்லி: மக்களவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ஏழாவது நாளான இன்று, தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை மேற்கோள்காட்டி, திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மானத்தைக் கொடுத்தனர்.
தொடர்ந்து மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு, “ஃபெஞ்சல் புயல் இயற்கைப் பேரிடர் 14 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை , செங்கல்பட்டு மற்றும் பல மாவட்டங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையின் காரணமாக பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கி அழுகிவிட்டன. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்படந்துள்ளனர். உணவுத்தட்டுப்பாடும் நிலவும் சூழல் இருக்கிறது. துணை முதலமைச்சர் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று களநிலவரத்தை அறிந்துகொண்டார்.
நேற்று கூட முதலமைச்சர் அவர்கள் பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதைத்தொடர்ந்து முதலமைச்சரிடம் பிரதமர் அவர்கள் இன்று (டிசம்பர் 3) காலையில் பேசினார். இந்தப் பேரிடரால் ஒன்றரை கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 721 வீடுகள் சேதமடைந்துள்ளன. 963 கால்நடைகள் மரணமடைந்துள்ளன. சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடந்துள்ளன.
சுமார், 417 கிராம தண்ணீர் தொட்டிகள் சேதமடைந்துள்ளன. 997 டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்துள்ளன. 5000க்கும் மேற்பட்ட பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பஞ்சாயத்து கட்டடங்கள், சமூக நலக் கூடங்கள் பாதிப்படைந்துள்ளன. ஆகவே இதையெல்லாம் கவனத்தில் கொண்டு பிரதமர் மோடி முதலமைச்சர் கோரிய நிவாரணத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,” என்று கூறினார்.
ஃபெஞ்சல் புயல்:
இலங்கை திரிகோணமலை கடற்பகுதியில் நவம்பர் 24-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மெதுவாக நகர்ந்து புதுச்சேரி, காரைக்கால் இடையே நவம்பர் 30 இரவு கரையைக் கடந்தது. பெரிய பாதிப்புகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புயல் கரையை மெதுவாகக் கடந்து அங்கேயே சில நேரம் தங்கி பெரு மழையை உருவாக்கியது.
இதையும் படிங்க:சாத்தனூர் அணை திறப்பு: 5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
இதனால், விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், புதுச்சேரி ஆகிய பகுதிகள் நீரில் தத்தளித்தன. ஒருபடி மேலாக, திருவண்ணாமலையில் மலையில் இருந்து மண்சரிவு ஏற்பட்டு, பாறை உருண்டு விழுந்து வீடு புதையுண்டதில், ஐந்து குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதுமட்டுமில்லாமல், பல இடங்களில் மின்சார தாக்கியும், விபத்துகள் ஏற்பட்டும் சிலர் உயிரிழந்தனர். மேலும், இம்மழை டெல்டா மாவட்ட விவசாய நிலங்களையும் அடியோடு நீருக்கடியில் மூழ்கடித்தது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், வெள்ள பாதிப்புகளைக் குறிப்பிட்டு, தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து உடனடியாக ரூ.2,000 கோடியை விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்தார்.
பிரதமருக்குக் கடிதம்:
தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் கனமழை மற்றும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, பெரும்பாலான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. இதனால் உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஃபெஞ்சல் புயல், மழை பாதிப்பு: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணம்!
இந்த பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி மக்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தவிர்த்து, இந்த பேரழிவின் காரணமாக, 12 மனித உயிரிழப்புகளும், 2,416 குடிசைகள், 721 வீடுகள் மற்றும் 963 கால்நடைகள் இழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அத்தோடு, 2,11,139 ஹெக்டேர் பரப்பளவிற்கு விவசாய மற்றும் தோட்டக்கலை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும், 9,576 கி.மீ சாலைகள், 1,847 சிறுபாலங்கள் மற்றும் 417 குளங்கள் சேதமடைந்துள்ளது. அத்தோடு, 1,649 கி.மீ அளவிற்கு மின் கடத்திகள்; 23,664 மின்கம்பங்கள்; 997 மின்மாற்றிகள்; 1,650 பஞ்சாயத்து கட்டடங்கள்; 4,269 அங்கன்வாடி மையங்கள்; 205 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; 5,936 பள்ளிக் கட்டடங்கள்; 381 சமுதாயக் கூடங்கள் மற்றும் 623 குடிநீர் வழங்கல் பணிகள் கடுமையாக சேதமடைந்துள்ளது,” என்று குறிப்பிட்டிருந்தார்.