அமிர்தசரஸ்: பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சரும், சிரோன்மணி அகாலிதள் தலைவருமான சுக்பீர் சிங் பாதலை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். இவர் காலிஸ்தான் இயக்கத்தின் முன்னாள் தீவிரவாதி என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு வெளியே செளதார் பணி மேற்கொண்டிருந்தபோது சுக்பீர் சிங் பாதலுக்கு நெருக்கமாக வந்த நபர், தமது துப்பாக்கியை எடுத்து சுட முயன்றபோது சிக்பீர் சிங் பாதலின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி அந்த நபரை மடக்கி பிடித்து, அந்த நபரின் கையை துப்பாக்கியுடன் வேறு திசையை நோக்கி திருப்பியதால் துப்பாக்கி வான் நோக்கி வெடித்தது. இதனால், சுக்பீர் சிங் பாதல் உயிர் தப்பினர். வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பஞ்சாப்பில் 2007ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சிரோன்மணி அகாலிதள ஆட்சி நடைபெற்றது. அப்போது நடைபெற்ற தவறுகளுக்காக அவருக்கு பொற்கோவிலுக்கு வெளியே சேவை செய்யும்படி தண்டனை அளிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது நாளாக சேவை மேற்கொள்ள வந்தபோதுதான் இந்த சம்பவம் நடைபெற்றது. அந்த சமயத்தில் ஊடகங்கள் சுக்பீர் சிங் பாதலுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து செய்தி சேகரி்கக வந்திருந்தன. அப்போது இந்த சம்பவம் நடைபெற்றதால் அதனை ஊடகங்கள் வீடியோவாகவும், புகைப்படமாக எடுக்க நேர்ந்தது.
காலில் காயம் ஏற்பட்டிருந்த சுக்பீர் சிங் பாதல் சர்க்கர நாற்காலியில் பொற்கோவிலுக்கு வெளியே அமர்ந்திருந்தார். அப்போது அவரை சுடும் நோக்கத்துடன் நரேன் சிங் சௌரா சுக்பீர் சிங் பாதலை நோக்கி மெதுவாக நடந்து செல்லும் காட்சியும், தமது பையில் இருந்து துப்பாக்கியை எடுப்பதும், பாதுகாப்பு அதிகாரி அந்த நபரை வளைத்து துப்பாக்கியை திருப்பியதால் சுக்பீர் சிங் பாதல் உயிர் தப்பியதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
இதையும் படிங்க: மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய தவெக தலைவர் விஜய்!
பாதலுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதால் பாதுகாப்பு அதிகாரி அவருடனேயே இருந்ததால் துப்பாக்கியால் சுட்ட நபரை உடனடியாக பிடிக்க முடிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் விரைவு படையின் உறுப்பினர்கள் பொற்கோவிலை சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அமிர்தசரஸ் காவல்துறை ஆணையர் குருப்ரீத் சிங் புல்லார், "பாதலை சுட்டுக் கொல்ல முயன்ற நபரான நரேன் சிங் சௌரா முன்னாள் காலிஸ்தான் தீவிரவாதி ஆவார். பாதலுடன் இருந்த காவல்துறை அதிகாரி மிகவும் எச்சரிக்கையாக இருந்ததால் அந்த நபரை உரிய நேரத்தில் பிடிக்க முடிந்தது. இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,"என்றார்.
அகல் தக்த் ஜதேதார் கியானி ரக்பீர் சிங் மற்றும் அகாலிதள் தலைவர்கள் இந்த தாக்குதல் முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய அகாலி தளத்தின் மூத்த தலைவர் தல்ஜித் சிங் சீமா, "இப்போது பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. சுக்பீர் சிங் பாதல் கொலை முயற்சிக்கு பொறுப்பேற்று பகவந்த் மான் பதவி விலக வண்டும். இது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்,"எனவும் கோரிக்கை விடுத்தார்.